Wednesday, July 3, 2024

 துர்ரன் தளீர்


ஓவியர் இக்லாஸை தூரத்தில் இருந்தே நான் அடையாளம் கண்டு கொண்டேன். விகாரமகாதேவி பூங்கா நடைபாதை வழியே அவர் நடந்து சென்றுகொண்டிருந்தார். எனது பைக்கை ஓரமாக்கி வீதி அருகில் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு திரும்பி வருகையில் பணம் தருவாக பார்க்கின் வசூல் செய்யும் நகர சபை ஊழியருக்கு சைகை செய்துவிட்டு விரைந்து ஓடி இக்லாஸ் அருகில் சென்று அவருக்கு ஸலாம் கூறினேன். என்னைப் பார்த்த அதிர்ச்சியில் மிகுந்த ஆர்வத்துடன் என்னைக் கட்டியணைத்துக் கொண்டார். 



'என்ன இந்த பக்கம், வோக்கிங் வந்தீங்களா?' எனக் கேட்டார் இக்லாஸ்.



'வேலை முடிந்து வீட்டுக்குப் போயிட்டிருந்தன். அப்பதான் உங்களைப் பார்த்தேன். உடனே வந்துட்டன்...' என்றேன்.



ஓஹ் குட்..குட்... கம் லெட்ஸ் வோக்.... என திரும்பி நடக்க ஆரம்பிக்க ஆரம்பித்தவருடன் நானும் கூட சேர்ந்து நடக்க ஆரம்பித்தேன்.



'மகன் எப்பிடி இருக்காரு... ஏதும் மாற்றம் இருக்கா.. என விசாரித்தார். 



'அப்படியேதான் இருக்கார். மத்தப்படி ஓகே!' என்றேன். 



பூங்கா நடைபாதை வளைவில் வெறுமையாக இருந்த சீமெந்து பெஞ்சில் போய் உட்கார்ந்தார். நானும் அருகில் அமர்ந்து கொண்டேன். தாடி வளர்ந்திருந்தது. இரண்டு வாரமாவது இருக்கும் சவரம் செய்து.  என்னைப் போலவே அவருக்கும் அதிகம் இளநரை இருந்தது. கட்டம் போட்ட நீல சேட்டும் ட்ரவுசரும் அணிந்திருந்தார். வி கே சி செப்பல் அணிந்திருந்தார். காலுக்கு மேல் கால் போட்டவராக இடது கையை பெஞ்சில் நீட்டிவைத்தவாறு என்பக்கம் திரும்பிப் பேசினார். 


'இங்க லைப்ரரில ஒரு எக்சிபிசன். பெயின்டிங்ஸ். பாக்கலாம்னு வந்தேன். அப்பிடியே ஒரு ரவுன்ட் பார்க்ல நடக்க யோசனை வந்திச்சி, அதான் நடந்துக்கிட்டு வந்தன்.' என்றார். 



'புதிசா ஏதும் வரஞ்சிருக்கிறீங்களா?' என நான் கேட்டேன். 



அப்படியே முன்னே வெறித்துப்பார்தவாறு சிந்தனையில் மூழ்கிப்போனார். ஒரே அமைதி. அவராக ஏதும் சொல்லும் வரை நானும் காத்திருந்தேன். அப்படியே இயல்பாக என்பார்வை பூங்காவை சுற்றியது. காதல் ஜோடிகள் ஒன்று ஆலிங்கனதுடன் வெளியுலகம் பற்றி சிரத்தையற்று ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு இருந்தது. தூரத்தே குழந்தையை நடக்கவிட்டு ஒரு முஸ்லிம் பெண் பின்னால் சூதானமாக சென்றுகொண்டிருந்தார்;. அவள் பின்னே அவளது கணவன் பேபி ட்ரொலியை தள்ளியவாறு சென்று கொண்டிருந்தார். ஒரு மரத்தின் அடியில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் ஆயாசமாக நிலத்தில் விரிப்பை விரித்துப் படுத்தவாறு நூல் படித்துக்கொண்டிருந்தாள். எங்கள் பின்னால் இருந்த நடைபாதையில்  பன்னிரெண்டு பதிமூனு வயது மதிக்கத்தக்க ஆண் பிள்ளைகள் சைக்கிள் மிதித்;தவாறு எங்களைக் கடந்து சென்றனர்.



இக்லாஸ் எனக்கு சென்ற ஆண்டுதான் அறிமுகமானார். சரியாக சொல்வதானால் ஜூலை மாதம். என் மகன் சுகவீனமுற்று பொரளை லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் 9ம் வாட்டில் அனுமதிக்கப்பட்ருந்த போதுதான் அவரை நான் அங்கு கண்டேன். பெரிதாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஒரு அறிமுகத்துக்காக இலோசான புன்னகையுடன் தலையை அசைத்தார். பதிலுக்கு நானும் புன்னகைத்தேன். அவரது பிள்ளையும் எனது மகனும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். நானும் அவரும் தீவிர சிகிச்சைப் பிரிவின் கதவிலிருக்கும் கண்ணாடியூடாக எங்களது பிள்ளைகளை பார்த்துக் கொண்டிருந்தோம். இக்லாஸின் மனைவி அவரிடம் வந்து வீட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்களை கொடுத்துவிட்டு அவரிடம் இருந்த பையை பெற்று திறந்து பார்த்தவாறு இருந்தாள். அவள் இளவயதாக இருந்தாள். மெலிந்த அளவான அழகான தோற்றம். துருவென்ற சுறு சுறுப்பு. மீண்டும் உள்ளே சென்ற அவள் எனது மனைவி அருகில் சென்றாள்.  எனது மனைவி கதிரையில் இருந்தவாறு தலையை கட்டிலில் வைத்து உறங்கிக் கொண்டிருந்தாள். இக்லாஸின் மனைவி எனது மனைவியை உசுப்பி எழுப்பிவிட்டாள். தன்னை மறந்து தூங்கியிருந்த என் மனைவி திடீரென தூக்கம் கலைந்த அதிர்சியில் இருந்து நிதாமடைய சில விநாடிகள் சென்றது. கதிரையில் இருந்தவாறு கண்ணாடி வழியாக என்னை பார்க்க முயற்சித்தாள். அப்படியே மெதுவாக எழுந்து முகத்தை துடைத்துக் கொண்டாள். தலையில் துண்டை சரிசெய்தவாறு நடந்து என்னை நோக்கி வந்தாள். கதவைத் திறந்து வெளியே வந்த போது குளிர்ந்த ஏசிக் காற்று என்னில் பட்டு ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.



கதவுக்கு எதிரே எனது மகனின் கட்டில் இருந்தது. காலில் ஒட்சிசன் மீட்டர் கிளிப் செய்திருந்தார்கள். நெஞ்சில் ஈசிஜி வயர்கள் பொருத்தப்பட்டிருந்தது. ஒட்சிசன் வழங்கியிருந்தார்கள். அந்த முகமூடி எனது மகனின் முகத்தை மறைத்தது. இரண்டு மூன்று நாட்களாகிவிட்டது. கோமா நிலைக்கு சென்று விட்டதாக வைத்தியர்கள் சொல்லியிருந்தார்கள். நான்கு நாட்களுக்கு முன்னால் என்னை காய்ச்சல் நூறு டிகிரியில் வாட்டியெடுத்தது. அது அப்படியே என் மகனுக்கு தொற்றிவிட்டது. இரண்டுநாட்களாக பிள்ளை கண் திறக்கவேயில்லை. இதற்குமேல் வைத்திருப்பது சரியில்லை என்று வைத்தியசாலைக்கு கொண்டுவந்திருந்தோம். ஏற்கனவே பியூமரேஸ் டெபிசன்சி என்ற நோயினால் படுத்தபடுக்கையாக இருக்கும் எனது மகனை இந்தக் காய்ச்சல் கடுமையாக தாக்கிவிட்டது. இனிமேல் ஐம்பது சதவீதமே பிழைப்பதற்கு வாய்ப்பிருப்பதாக சொல்லிவிட்டார்கள். 



எனது மனைவிக்கு கொடுக்கக் கொண்டுபோயிருந்த இரவு உணவையும் மாலை நேர டீ யையும் அவளிடம் நீட்டினேன். எதிலும் பிடிப்பில்லாதவளாக தன் கால்களைக் காட்டினாள். கணுக்காள்கள் இரண்டும் வீங்கியிருந்தது. 



அல்சர் குளிச வாங்கினயா? என்றாள். 



சட்டைப் பையிலிருந்து குளிசையை எடுத்து அவளிடம் நீட்டினேன். அந்நேரம் இக்லாஸின் மனைவியும் வெளியில் வந்து அவருக்கு அருகில் நின்று பேச ஆரம்பித்தாள். 



'அவகுட பிள்ளைக்கு என்ன? என நான் கேட்டேன்.



'புறந்த நாளையில இருந்து அதுக்கு வருத்தம் தானாம். புரோடின் குறையிறயாம்.' என்றாள். 



அப்பிடி என்டா' என நான் கேட்டேன். 



'நான் என்ன டொக்டரா' என என்னிடம் சலித்துக்கொண்டாள். 'இன்டக்கி நோன்பு அவள், பாவம் நல்ல புள்ள, முதல் புள்ளயாம், ஒரு சாதியா துரு துருவென்டு சலப்பிக்கிட்டே இருப்பாள்' என்று கூறினாள். 



'ஏதும் சொன்னானுகளா? என்றவாறு கதவருகில் சென்று கண்ணாடிவழியாக எனது பிள்ளையைப் பார்த்தவாறு கேட்டேன். 



நிராசையுடன் இல்லை என்றவாறு தலையை மட்டும் ஆட்டினாள். பொருட்களை வைத்துவிட்டு வருவதாக சொல்லி உள்ளே சென்றாள். 



அப்போதுதான் இக்லாஸ§ம் நானும் மறுபடி சிரித்துக் கொண்டோம். வைத்தியசாலையில் சந்திக்க ஆரம்பித்து சில நாட்களில் எங்களுக்குள் சற்;று நெருக்கம் கூடியிருந்தது. வெள்ளிக்கிழமை நாளொன்றில் ஜ§ம்ஆவுக்கு சென்று திரும்பிவரும் போது இருவரும் வைத்தியசாலை கென்டீனில் சாப்பிட்டோம். அப்போதுதான் அவர் என் தொழிலைப் பற்றி விசாரித்தார். அவர் பத்திரிகை ஒன்றில் ஓவியராக பணி புரிவதாக தெரிவித்தார். 



அந்த அறிமுகத்தின் பின்னர் வைத்தியசாலையில் இருந்து பிள்ளை குணமடைந்து வீடு வந்த பின்னரும் அவரும் நானும் அடிக்கடி வெள்ளிக்கிழமைகளில் பள்ளியில் தொழுகையில் சந்தித்துப் பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டோம். பகல் உணவை ஒன்றாக உண்பது எங்களுக்குள் வழக்கமாகியிருந்தது. ஓவியம் வரைவது பற்றி நான் அவரிடம் அடிக்கடி வினவுவேன். 



'மோனாலிசா, இறுதி இராப்போஷணம் மாதிரி சீரியஸா நீங்க வரைய மாட்டீங்களா? என நான் கேட்டேன்.



'பத்திரிகைகளுக்கு அந்த மாதிரி ஓவியங்கள் தேவையில்லை. பிரசுரிக்க வேண்டிய கதைகளுக்கு பொருத்தமான படங்களை வரைவது எனது வேலை. நீங்க சொல்றது சீரியஸ் வேக்ஸ். அதுக்கு எங்குட ஒபிஸ்ல வேலை இல்ல. ஆனா என் மனத்திருப்திக்கு அது மாதிரி சீரியஸா வரைவதுண்டு. அப்பிடி வரைந்தவைகளை என் வீட்டில் வைத்திருக்கிறேன்' என்றார்  இக்லாஸ்.



'ஓவியம் ஒரு தூண்டுதல், விரகதாபத்தில் இருப்பவருக்கு காமம் வெளிவர துடிப்பது போலத்தான் ஓவிய கருவும். அப்படி ஒரு தூண்டல் வரும்போது அதை வரைந்து முடிக்கும் வரை அது அடங்காது, காமம் உச்சத்தை அடைவது போல' என்று தொடர்ந்தும் கூறினார் இக்லாஸ். 



நோன்புப் பெருநாளைக்கு ஊருக்கு சென்றதிலிருந்து இருவரும் ஒன்றாக சந்தித்துப் பேசிக் கொள்ளவேயில்லை. லீவு முடிந்து ஊரிலிருந்து திரும்பி வந்த பின்னரும் அவரை சந்திக்க கிடைக்கவில்லை. ஹஜ்ஜ§ப் பொருநாளும் முடிந்து இன்றுதான் அவரை நீண்ட நாட்களின் பின் அவரைச் சந்தித்திருக்கிறேன். அவரிடம் பேசுவதற்கு நிறையவே இருந்தது.



தன் மௌனத்தை கலைத்த இக்லாஸ் திரும்பி என்னைப் பார்த்தவாறு தன் கண்கள் ஒளிர புருவங்களை உயர்த்தி  'இப்ப ஒரு ஓவியம் வரஞ்சிக்கிட்டு இருக்கேன். உங்களுக்கும் அதில பங்கிருக்கு மிராஸ்;' என்றார் இக்லாஸ்

.


'எனக்கா!? என்றேன்.



'அந்த கென்செப்ட் உங்குளுக்குப் புரியும். மனிதர்கள் எத்தகைய துக்கத்தையும் கடந்து போய்விடுகிறார்கள். எவ்வளவு பெரிய துன்பமான நிகழ்வுகளிலும் சிறு சிறு சந்தோசங்களை தேடிக்கொள்கிறாhர்கள். அந்த சந்தோசம்தான் அந்த துன்பத்தை அவர்கள் கடந்து போக வழி செய்கிறது. அது காரிருளில் தெரியும் ஒரு துளி வெளிச்சம். அதன் வழியாகத்தான் மக்கள் துன்பத்தை தாண்டிவருகிறார்கள்' என்றார் இக்லாஸ்.



'இதில் நான் எங்கு சம்பந்தப்படுகிறேன்' என்றேன் நான்.



'நம்முட மனுசிமாருதான் உதாரணம். பிள்ளைகள் பிழைக்கிறதே நம்பிக்கை இல்லாம இருந்தப்ப இதுகள் வாட்டுக்குள்ளயே சிரிச்சிப் பேசி ஜோக் அடிச்சி, சிரிச்சி சிரிச்சி செத்தாளுகளாம். உங்குட வைபும் சொல்லி இருப்பாவே' என்று அவர் கூற..



'ம்... துர்ரன் தளீர்' என்றேன் நான்.



அவரும் 'துர்ரன் தளீர்' என்றார் கோரசாக. இருவரும் பலமாக சிரித்துக்கொண்டோம். 



சிரிப்பை நிறுத்திய இக்லாஸ் 'பாருங்க இப்ப சொன்னாலும் நமக்கே சிரிப்பு வருது. இதுதான் என்னை ஓவியம் வரைய தூண்டியது. துர்ரன் தளீர் என்பது ஒருத்தியோட பெயர்தான். இருந்தாலும் அது நமக்கு ஒரு சஞ்சீவி மாதிரி. ஒரு துருவ நட்சத்திரம்... நம்பிக்கை.. வாழ்வில் ஒரு பிடிப்பு... நிராசையாக கிடந்த இந்த பொம்புளைகள அந்தப் பெயர்தான் தங்கள் கவலை மறந்து சிரிக்கவைத்தது. இதை மையமா வச்சுத்தான் இந்த ஓவியத்தை நான் வரஞ்சிட்டு இருக்கன்' என்றார் இக்லாஸ்.



'இப்ப எந்த மட்டுல இருக்குது ஓவியம்' என்றேன் நான்.



'இப்பெல்லாம் எங்குட வீட்டு சின்னஞ் சிறிசுகள் கூட என்ன பகிடி பன்னுதுகள் மிராஸ். நான் ஏதோ துர்ரன் தளீர் என்கிற பெயருக்கு வசியம் ஆகிட்டதா நினைக்குதுகள்...' என்றார் இக்லாஸ்.



இதைக் கேட்டு நானும் சிரிக்க அவரும் பலமாக சிரிக்க ஆரம்பித்தார். அப்படியே எழுந்தவாறு,



'எனக்கு லேட் ஆகுது மிராஸ். வார கிழம ஜ§ம்ஆவுல சந்திப்பம் என்றார்.



இருவரும் விடைபெற்றுக் கொண்டு பிரிந்தோம். நான் அப்படிவே பைக் வைத்திருக்கும் இடத்துக்கு வந்து வீட்டுக்கு புறப்பட்டேன். துர்ரன் தளீர் என் நினைவுகளை வருட ஆரம்பித்தது.



ஒன்பதாம் வாட்டிலிருந்து எனது மகனை இரண்டாம் வாட்டுக்கு மாற்றியிருந்தார்கள். எனது மகனின் நிலையில் முன்னேற்றம் இருக்கவில்லை. நினைவு திரும்பவேயில்லை. பெலியாடிக்; கெயர் என்ற கோமா நோயாளிகளை பராமரிக்கும் முறையை சொல்லித்தந்தார்கள். இதற்கு மேல் அவர்களால் செய்வதற்கு எதுவுமில்லை. என்னையும் என் மனைவியையும் அழைத்து ஆற்றுப்படுத்துமாறு சீனியர் டொக்டர் ஜ§னியர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். எங்கள் மதத்தைச் சேர்ந்த மௌலவிமார்கள் யாரையும் அழைத்து வந்து ஏதும் பிரார்த்தனைகள் செய்ய வேண்டுமா எனவும் கேட்டார்கள். கடைசியாக என்னதான் சொல்ல வருகிறீர்கள் என்று பிடிவாதமாக கேட்டோம். ஒன்றில் பிள்ளை இப்படியே கண் திறக்காது இருந்து மரணிக்கும் அல்லது தொடர்ந்து கோமாவிலேயே இருக்கும் என்று பதில் தந்தார்கள். எனக்கு அழுவதற்குக் கூட தெம்பிருக்கவில்லை. மனைவி அழுது கொண்டிருந்தாள். பிள்ளையை இனிமேல் வீட்டில் வைத்து பராமரிக்குமாறு எங்களைக் கேட்டுக் கொண்டார்கள்.



ஆறாவது அல்லது ஏழாவது நாளில் இக்லாஸின் பிள்ளை பற்றி எனது மனைவியிடம் விசாரித்தேன். வாட்டு மாற்றியதில் இருந்து அவரை சந்திக்கவில்லை. 



'அந்தப் புள்ள சரியான ஜோக்... கொழும்புல அவகுட சொந்தக் கார சாச்சி ஒருத்தர் இருக்காவாம் அவட பேருதான்...துர்...ஹா..ஹா.. ஹாhh என சிரித்துச் சிரித்துச் சொன்னாள். 



துர்ரன் தளீர் என்ற பெயரை அவளால் எப்போதும் சரியாக சொல்லவே முடியவில்லை. 



'எப்பிடியென்டு தெரியுமா... அத ஒரு மாதிரியா...தளீர் என்று இழுத்து கூப்புடுவாங்களாம்... வாட்டுக்க வச்சி அவள் இதச் சொன்னா நாங்க சிரிச்சி சிரிச்சி சாகிறதான்... நேர்ஸ்மாரெல்லம் வந்து ஒரு மாதிரியா பாப்பாளுகள்! ஹா...ஹா..' என்று சிரித்துச் சிரித்து நினைவை மீட்டிக்கொள்வாள். இன்றும் அந்தப் பெயரை வைத்து எங்கள் வீட்டு சின்னஞ் சிறிசுகள் கூட என்னையும் பகிடி செய்கிறார்கள். அந்தப் பெயரை சொல்லும் போது எனக்குள்ளும் ஒரு சிரிப்பு துளிர்விடுகிறது. உதட்டை குவித்து அந்த சிரிப்பை மெலிதாக அடக்கவும் செய்கின்றேன்.



இக்லாஸ் வரையும் ஓவியத்தில் அவர் துர்ரன் தளீரை எப்படி வரைவார். என்ற சிந்தனை என்னில் கிளைகொண்டது. துர்ரன் தளீரை நானோ அவரோ கண்டதில்லை. துர்ரன் தளீரை இப்போது என்மனதில் ஓவியமாக தீட்ட அரம்பித்திருந்தேன். நீண்ட வெண்மையான அடர்த்தியான சிறகுகளைக் கொண்ட அவள் தன் சிறகுளை வளைத்து அரவணைக்குகையில் இருண்டு கிடக்கும் உள்ளச் சிடுக்குகளில் இருந்து கவலைகள் மெல்ல மெல்ல கசிந்து படிய ஆரம்பிக்கிறது. மரணங்களை ஏந்திய பெண்களும் அந்த அரவணைப்பில் புன்னகைத்து அலவலாவுவர். அவர்களது புன்னகைகளில் இருந்து எழும்பும் ஒலி துர்ரன் தளிராக எமக்குள் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.



முற்றும்

01.07.2024


விடிவெள்ளி பத்திரிகையில் பிரசுரமானது . 04.07.2024

https://epaper.vidivelli.lk/newspaper/Weekly/vidivelli/2024-07-04#page-10



Thursday, June 27, 2024

 அருளப்படாத ஸுஹுபுகள்!

எழுத்தாணிகள் பதியாத ஹர்புகள்!
பாராயணம் செய்யப்படாத ஆயத்துக்கள்!
1. ஓ மக்களே! பசுமையான வாழைமரங்களில் ஏறாதீர்கள். வாழைமரங்கள் பலமானவை என்று நீங்கள் நம்பிக்கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களும் அப்படித்தான் நம்பிக்கொண்டிருந்தார்கள். ‘நாம் எம் மூதாதையர்கள் வழிகளில் நிற்கின்றோம்’என்று அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் பிடிவாதக்காரர்கள். அவர்கள் சத்தியத்தை பார்கக் கூடாது என்பதற்காக தம் முகங்களை புற முதுகு தெரியும் வரை திருப்பிக் கொள்கிறார்கள். அவர்கள் சிந்திக்கவே மாட்டார்கள். சிந்திக்காத சமூகத்தார்களுக்கு அநியாயக்கார்களை நாம் பரிசாக சாட்டிவிடுவோம்.
2. அடி அறுக்கப்படும் வாழைமரங்களில் மக்களை ஏற்றுபவர்கள் பெரும் அநியாயக்காரர்கள். அவர்கள் மக்களை தம் கந்தர்வக்குரல்களாலும் எழில் கொஞ்சும் தோற்றத்தாலும் அநியாயமாக ஏமாற்றுகிறார்கள். நாம் அநியாயத்தை எமது நியதிகளில் ஒன்றாக ஆக்கிக் கொள்ளவில்லை. மக்களை வாழை மரங்களில் ஏற்றி அடியில் வெட்டிவிடுபவர்கள் சாபத்துக்குள்ளானவர்கள். அவர்களது இதயங்கள் கல்லாகிவிட்டன. நிச்சமயாக அவர்களது உள்ளங்கள் கல்லாகித்தான் போய்விட்டன.
3. திருவுளமாகுபவரே! நீர் உம் மக்களைப் பார்த்து கேட்பீராக! இன்னும், மூதாதையர்கள் செய்தவை பித்அத்துகள் என்று மல்லுக்கு நிற்பவர்களை பார்த்து நீர் கேட்பீராக! மக்களை பகட்டாகவும் கபடமாகவும் ஏமாற்றி அவர்களை வாழை மரங்களில் ஏற்றுபவர்களை நீங்கள் ஏன் தோலுரிப்பதில்லை?
4. திருவுளமாகுபவரே! வாகாக அனைத்தையும் மறந்துவிடும் இந்த கூட்டத்தாரிடம் நீங்கள் கூறுவீராக. ஓ மக்களே! முன்னரும் அவர்கள் உங்களை வாழைமரங்களில் ஏற்றி அடியை வெட்டினார்கள். அவர்கள் வெட்டியது வாழைமரங்களை அல்ல. உங்களது புத்தியை! அதனால் நீங்கள் கண்ணிருந்தும் பார்க்க மாட்டீர்கள். காதிருந்தும் கேட்கமாட்டீர்கள். வாயிருந்தும் கேள்வி கேட்கமாட்டீர்கள். மூளையிருந்தும் சிந்திக்க மாட்டீர்கள். இன்னமும் நீங்கள் சிந்திக்க மாட்டீர்கள்.
5. மக்களை வாழைமரங்களில் ஏற்றிப்பிழைக்கும் இந்த அநியாயக்காரர்களை பற்றி நீங்கள் பகுத்தறியக்கூடாதா? அவர்கள் எப்போதும் காணல் நீரையே உங்களுக்கு வாக்களிக்கிறார்கள். காணல் நீரின் பின்னால் ஒடுபவர்களது தாகம் என்றும் தீர்வதில்லை. இருந்தும் அவர்கள் அதனை நம்பி அதன் பின்னால் ஓடிக்கொண்டே இருப்பார்கள்.
6. மக்களை வாழை மரத்தில் ஏற்றுவதற்காக இவர்கள் தங்கள் கழுத்துக்களில் பொய்களாலும் புரட்டுக்களாலும் ஆன திராட்சை குலைகளை சுமந்து வருகின்றார்கள். அந்த திராட்சைகள் பார்ப்பவர்கள் கண்களை நிச்சமாக மயக்கிவிடுகின்றன. பலஹீமான உள்ளம் கொண்டவர்கள் அதை ஈமான் கொண்டு விசுவாசித்து விடுகிறார்கள்.
7. இந்த கபடதாரிகள் மக்களை கூட்டமாக திரட்டி அவர்களை வாழை மரங்களில் ஏற்றி அவர்களது வாய்களில் இந்த திராட்சைகளை வைத்துவிடுகிறார்கள். புளிப்பும், இனிப்பும் கொண்ட திராடட்சைகளை உண்பவர்கள் அதன் சுவையில் மயங்கிவிடுகிறார்கள். இவர்கள் சூனியக்காரர்களுக்கு ஒப்பானவர்கள். பின்னரும், அந்த திராட்சைகளை உண்பவர்கள் சிந்திக்க மாட்டார்கள். அவர்களது சிந்தனைகள் மழுங்கடிக்கப்பட்டுவிட்டது. நீங்கள் சிந்திக்க வேண்டாமா? நிச்சமயாக சிந்திக்காதவர்களை ஷைத்தான் இலகுவாக ஏமாற்றிவிடுகிறான்.
8. திருவுளமாகுபவரே! நீர் உம் மக்களைப் பார்த்து சொல்வீராக! மக்களை வாழைமரங்களில் ஏற்றிப்பிழைக்கும் இந்த அநியாயக்காரர்களைக் கண்டு வியக்காதீர்கள். நிச்சயமாக! எதையும் பார்த்ததும் வியப்பவன் தன்னை அதன் முன் ஒப்புவித்துவிடுகிறான். பின்னரும் நீங்கள் அவர்கள் சொல்வதை (எமது) வேதவாக்குகள் போல் விசுவாசித்து பின்பற்ற ஆரம்பித்து விடுவீர்கள். அவர்களது பாவங்களில் நீங்களும் பங்காளர்களாக வேண்டாம்.
9. ஓ மக்களே! மக்களை வாழைமரங்களில் ஏற்றிப்பிழைக்கும் இந்த அநியாயக்காரர்களுக்காக நீங்கள் பரஸ்பரம் அநியாயம் செய்து, பரஸ்பரம் உங்கள் இரத்தங்களை ஓட்டாதீர்கள். அநியாயம் செய்வதும் இரத்தத்தை ஓட்டுவதும் எமது நியதிகளில் ஒன்றல்ல. நிஜங்களை விற்று நீங்கள் பொய்யை வாங்குவீர்களா? இல்லை. சிந்திப்பவர்கள் சொல்வார்கள் ‘இந்த எமாற்றுப் பேர்வழிகள் எதனைச் சொன்னாலும் நாம் உடனே நம்பிவிடமாட்டோம்.’
10. மக்களை வாழைமரங்களில் ஏற்றிப்பிழைப்பவர்களைப் பற்றி உமக்கு என்ன தெரியும்? நிச்சயமாக அவர்கள் இறைவனின் சோதனையாகும். அவர்கள் விடயத்தில் (விசுவாசிக்கும் விடயத்தில்) நீங்கள் அத்துமீறிவிட வேண்டாம். அவர்களது உள்ளங்களில் கருமை படர்ந்துள்ளது. கண்களில் பொய்கள் ஜொலிக்கிறது. அவர்கள் சொல்வதை விசுவாசித்து பூமியில் அநியாங்களை கட்டவிழ்த்துத் திரிய வேண்டாம். அநியாயக் காரர்கள் அநியாயம் இழைக்கப்படுபவர்களது சாபங்களை பயந்து கொள்ளட்டும். அவர்களது பிரார்த்தனைக்கும் இறைவனுக்கும் இடையில் திரைகள் கிடையாது.
11. சிந்திப்பீராக! மக்களை வாழைமரங்களில் ஏற்றிப்பிழைப்பவர்கள் தமக்குள் மோசமான வார்த்தைகளை கூறி ஏசிக்கொள்வதை நீர் பார்த்ததில்லையா? அவர்கள் தங்களுக்குள் பகலில் சண்டையிட்டும், தூசித்தும் கொள்வார்கள். மக்கள் இவர்கள் எமக்காகவே அதனை செய்கின்றனர் என எண்ணிக்கொள்ள வேண்டும் என்பதற்காக. பின்னரும் சூரியன் மேற்கில் மறைந்து இருள் கவியும் பொழுதுகளில் அவர்கள் தங்கள் மறைவிடங்களில் சந்தித்துக் கொள்கின்றனர். மீண்டும் சூரியன் உதிக்கும் வரை அவர்கள் கூடிப் பேசி மகிழ்கின்றனர்.
12. அறிந்துகொள்வீராக! வெளியில் விரேதமாகவும் உள்ரங்கத்தில் கூலாவியும் திரியும் இவர்கள் எப்போதும் விரோதிகள் அல்லா். மக்கள் சுயமாக சிந்தித்துவிடக்கூடாது என்பதற்காகவே அவர்கள் இவ்வாறு செய்கின்றார்கள். அவர்கள் நிரந்தர எதிகரிகளுமில்லை நண்பர்களுமில்லை. மாறாக பாவிகள்.
13. அன்றியும் இவர்களை சிலாகித்தும் பாராட்டியும் திரியும் அடிவருடிகளையும் நீங்கள் காண்பீர்கள். அவர்களும் இறைவனிடத்தில் பாவிகளே!
முற்றும்.
06.22.2024


Sunday, July 20, 2014

குழந்தைகளின் நடத்தைப் பண்புகளை நெறிப்படுத்தல்

'உம்மாவும் வாப்பாவும் சேரந்துதான் பிள்ளையை யூதனாவகவோ கிறிஸ்தவனாகவோ மாத்திவிடுகிறார்கள். மத்தப்படி பிள்ளைகள் பிறக்கும்போது இறைவனின் நியதிப்படி ஈமானிய இயல்புகள் கொண்டதாகத்தான் பிறக்கின்றன.' – முஹம்மது பின் அப்துல்லாஹ், அல்லாஹ்வின் தூதுவர்.

இது அல்லாஹ்வின் பிரதிநிதியின் அல்லது இப்போதய அரசியல் பாஷையில் சொல்வதானால் அல்லாஹ்வின் தூதுவர் அல்லது ராஜதந்திரி சொன்னது. அரசுகளை பிரதிநிதித்துவப்படுத்தி மற்றொரு நாட்டுக்கு இன்னொருவரைத்தான் தூதுவராக அனுப்புவார்கள். அந்த ராஜதந்திரி அல்லது தூதுவர் சொல்லும் கருத்தும் பேச்சும் முழுக்க முழுக்க அவர்சார்ந்து வந்துள்ள அரசின் கருத்தாகவும் நிலைப்பாடாகவும் இருக்கும். இதனால்தான் தான் ஏதாவது நாடுகள் அல்லது அரசாங்கங்கள் தப்புப் பன்னும் போது அதனை பொறுக்காத மக்கள் அந்ததந்த நாடுகளின் ராஜதந்திர அலுவலங்கள் தூதுவராலயங்கள் முன்னால் நின்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு தமது வெறுப்பைத் தெரிவிக்கிறார்கள். அதன் அர்த்தம் மக்கள் தப்புப் பன்னும் அரசை மக்கள் வெறுக்கிறார்கள் என்ற செய்தி குறித்த அரசுக்கு செல்ல வேண்டும் என்பதுதான். 

அல்லாஹ்வின் தூதுவர் சொன்ன மேற்படி வாக்கும் அதனையே குறிக்கும். நம்மைப் படைத்த இறைவன் நம்மை எப்படி தயாரித்து இருக்கிறான் என்பதற்கான ஒரு குறிப்பு. ஒரு பொருள் எப்படி தயாரிக்கப்பட்டுள்ளது? அதன் உள்ளடக்கங்கள் என்ன? எப்படிப் பாவித்தால் அது பழுதடையும். தவறாகப்பாவித்து குறித்த பொருள் பழுதடைந்தால் அதற்கு தயாரிப்பாளன் பொறுப்பேற்கத் தேவையில்லை என்ற விளக்கங்கள் நாம் சந்தையில் வாங்கும் ஒவ்வொரு பொறுளுக்கும் இருக்கும். இதை நாம் நன்கு அறிந்து வைத்திருக்கிறோம். அதற்கு நாம் பழக்கப்பட்டும் விட்டோம். 

மனிதன் என்கிற அல்லாஹ்வின் தயாரிப்பும் அடிப்படையில் அவனுக்கு சிரம்தாழ்த்தும் இயல்புடன் அமைந்ததாக தயாரிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பில் எந்த தவறும் இல்லை. அது அவனுக்கு சிரம்தாழ்த்தாது மனிதன் செல்கிறான் என்றால் அது மனிதன் என்கிற பொருள் பாவிக்கப்பட்ட விதத்தில் அல்லது வளர்க்கப்பட்ட விதத்தில் ஏதோ பிழை நடந்திருக்கிறது என்பதுதான் அதன் அர்த்தம். அதற்கு படைத்தவன் அல்லாஹ் பொறுப்பேற்கமாட்டான் என்பதுதான் இதன் சாராம்சம்.

'உம்மாவும் வாப்பாவும் சேரந்துதான் பிள்ளையை யூதனாவகவோ கிறிஸ்தவனாகவோ மாத்திவிடுகிறார்கள். மத்தப்படி பிள்ளைகள் பிறக்கும்போது இறைவனின் நியதிப்படி ஈமானிய இயல்புகள் கொண்டதாகத்தான் பிறக்கின்றன.

பிறக்கும் போதே முஸ்லிமாகப் பிறந்த உம்மாவும் வாப்பாவுமாகிய நாம் நமது குழந்தைகளை எப்படியும் முஸ்லிமாகவே வளர்ப்போம் என்ற ஆறுதல் நமக்கு இருக்கும். ஆனால் இந்த தூதுவரின் வாக்கில் இன்னொரு மறைமுக எச்சரிக்கை இருப்பதாக எமக்கு விளங்குகிறது. உண்மையில் நாம் சொல்ல வந்த விடயமும் அதுதான். பொய்சொல்லுவதில், உண்மையை மறுப்பதில், திரிவுபடுத்துவதில், சந்தர்ப்பம் பார்த்து நழுவுவது, ஏமாற்றுவது, கூட இருந்து குழிபறிப்பது, தேவைப்பட்டால் கொலைசெய்வது போன்ற குணவியல்புகள் இந்த இரண்டு கூட்டத்தாரினதும் கூடப்பிறந்தவைகள். அவர்களைவிட்டு அவற்றை பிரித்துப் பார்க்க முடியாது. இந்த பண்புகள் முஸ்லிமாகவுள்ள நம்மிடமும் இருக்கவே செய்கிறது. முழுக்க இதை மறுக்கவும் முடியாது. இதில் நாம் பேச வந்தது என்ன வென்றால் இந்த குணவியல்புகள் நமது பிள்ளைகளிடம் வருவதற்கும் நாம்தான் காரணமாக இருக்கிறோம் என்பதுதான். இந்த எச்சரிக்கைதான் நாம் பேசவந்தது. இங்குதான் குழந்தைகள் முன்னிலையில் நாம் எப்படி சிறந்த முன்மாதிரிகளாக நடந்துகொள்ள வேண்டும் என்கிற அவசியம் எழுகிறது.

நம்மில் எந்தவொரு உம்மாவும் வாப்பாவும் வேண்டுமென்றே குழந்தைகளை தப்பான வழியில் அழைத்துச் செல்வதில்லை என்ற அடிப்படையை மனதில் கொண்டு நாம் பேசுவோம். 

உண்மைபேச குழந்தைகளை ஊக்குவிப்போம்

இதற்கு ஒரே வழி உம்மா வாப்பாவாகிய நாம் உண்மைபேசுவதை பழக்கமாகக் கொள்வதுதான். (ஆங்கிலத்தில் படித்த ஒரு சம்பவம்) 'கிறிஸ்' மற்றும் அவனது நண்பன் 'போல்' இருவரும் சிறுபிள்ளைகள்.  ஒன்றாகவே எப்போதும் விளையாடுவார்கள். சில நாட்களாக இருவருக்குமிடையிலும் கடும் சண்டை. இதனை அவதானித்த 'கிறிஸ்'ஸின் தாய் 'கரோல்' சில நாட்களுக்கு இருவரையும் ஒன்றாக விளையாடவிடாமல் வைத்திருந்தால் நல்லது என்று முடிவெடுத்தாள். வழமை போல 'கிறிஸ்' ஐ வீட்டுக்கு தனது மகனுடன் விளையாட அனுப்புமாறு 'போல்' இன் தாய் தொலைபேசியில் சொன்னபோது, கரோல் தனது மகனுக்கு சுகமில்லை. அதனால் இன்று அவனை விளையாட அனுப்பமுடியாது என்று சொல்லிவிட்டாள்.

இதனை கேட்டுக் கொண்டிருந்த 'கிறிஸ்' அதிர்ச்சியடைந்து 'எனக்கு சுகமில்லையா? என்னம்மா நடந்தது?..என்று கேட்டான். அவன் பயந்திருப்பது கண்டு குழம்பிப் போன 'கரோல்' ..ஒன்டுமில்ல தங்கம்...சும்மாதான் அப்பிடி சொன்னேன்..போலின் தாய் வருத்தப்படுவாங்க இல்லயா..அதுதான் அப்படி சொன்னேன்' என்று சொல்லிவிட்டு சில நேரங்களில் சங்கடங்களை தவிர்ப்பதற்காக இப்படி சொல்ல வேண்டி வந்துவிடுகிறது என்று அவனுக்கு பாடம்; எடுக்க ஆரம்பித்தாள்.

ஆனால், உண்மையில் 'கிறிஸ்'ஸிற்;கு இந்த விளக்கங்கள் புரியவில்லை. அவன் புரிந்துகொண்டதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். 'தேவைப்படும் போது இந்தமாதிரி 'எடுத்துவிடுவதில் ஒன்றும் தப்பில்லை. அதைத்தான் பெரியவர்கள் செய்கிறார்கள்' என்பதுதான். 

எப்பவுமே நமது பிள்ளைகள் நம்மை அடியொட்டியே வளர்கிறார்கள். பொய்களை சொல்வதற்கு அல்லது உண்மைகளை மறைக்க நாமே அவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி தரக்கூடாது. இப்படி நமது வீடுகளில் அடிக்கடி நடப்பதுண்டு.. 'வாப்பாக்கிட்ட சொல்லதீங்க..நான் உங்களுக்கு சாக்லேட் வாங்கி தாரேன்..'. 'உனக்கு சாக்லேட் வாங்கி தந்ததை வீட்டபோனதும் தங்கச்சிக்கிட்ட சொல்லாத...'. ஒரு தவறை மறைத்து அப்புறமாக சரி செய்து கொள்ளலாம் என்பதற்காக இப்படி நாம் சில நேரங்களில் நடந்துவிடுகிறோம். வளர்ந்தவர்களாகிய நாம் எதுவித தயக்கமும் இன்றி நமது வீடுகளிலே உண்மைகளை பேசுவதனை நமது பிள்ளைகள் பார்க்கும் சந்தர்ப்பங்களை நாம் ஏற்படுத்திதரவேண்டும். 

கிறிஸ்ஸின் தாய் கரோல் இப்படி சொல்லியிருக்கலாம். ' இல்லங்க இன்றைக்கு வேண்டாம்.. தொடர்ந்து சண்டையே பிடிக்கிறாங்க..கொஞ்ச நாளைக்கு வேணாமே' என்று பேசியிருந்தால் தாய் பேசுவதனை கேட்டுக் கொண்டிருந்த 'கிறிஸ்' ..நாம் சண்டை பிடித்ததால்தான் இதெல்லாம் நடப்பதாக யோசித்திருக்க வாய்ப்புண்டு.

அடுத்தது, பொய் சொல்லுகிறார்கள் என்பதற்காக கத்திக்கூப்பாடு போடுவதும் ஒரு நல்ல வழிமுறை அல்ல. அது அவர்களை உண்மை பேச தூண்டாது. இன்னுமொரு நிகழ்வைப் பார்க்கலாம். 4 வயதேயான சிறுமி, ஜெனிஸ், வீட்டின் அறையில் விளையாடிக் கொண்டிருந்த போது அந்த அறைக்குள் அவளது தாய் நுழைகிறாள். அங்கு வைக்கப்பட்டிருந்த பூச்சாடியில் இருந்த செடியின் கிளைகள் ஒடிந்திருப்பதனை கண்டதும் அவளுக்கு கோபம் பற்றிக்கொண்டு வந்தது. இதற்கு முன்னர் ஜெனிஸ் தனது விளையாட்டு பொம்மையை அந்த செடியில் ஏறுவதற்கு பழக்குவது போல விளையாடிக் கொண்டிருந்தது கண்டு அப்படி விளையாடுவதற்கு அந்த செடி உறுதியானது அல்ல என்பதை அவளது தாய் அவளுக்கு சொல்லியிருந்தாள். ஆனால் தாய் கேட்டதற்கு அது அவர்கள் வீட்டு நாய்க்குட்டிதான் செடிக்கு மேல் பாய்ந்ததாக ஜெனிஸ் சொல்லிவிட்டாள்.

இந்த இடத்தில் ஜெனிஸின் தாய் கொஞ்சம் புத்திசாதுரியமாக நடந்து கொள்கிறாள். அவள் ' சரி ஜெனிஸ்..இதுக்கு மேல எனக்கு உன்ன திட்டமுடியாது..கொஞ்சம் நல்லா யோசிச்சு என்ன நடந்திச்சு என்று சொல்லு' என்று சொன்னதும் சிறிது யோசித்து விட்டு அதை தானே செய்ததாக ஜெனிஸ் ஒத்துக் கொள்கிறாள். அதன் பின்னர் அவளது தாய் அவளை திட்டாமல் அவளுடன் சேர்ந்து அறையை சுத்தம் செய்ய வைத்ததோடு அன்றய தினம் ஜெனிஸை தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்கவில்லை. அதே நேரம் அவள் உண்மை சொன்னதற்காக தனது மகளை பாராட்ட வேண்டும் என்பதையும் அவள் மறக்கவில்லை. உண்மையாக இருப்பது என்பது அவ்வளது எளிதல்ல என்பதை இது உணர்த்தினாலும் உண்மை சொல்வதால் ஜெனிஸூக்கு ஒரு மன ஆறுதலும் கிடைக்கிறது. கிடைக்கவிருந்த பெரும் தண்டனை குறைக்கப்பட்டதுடன் உண்மை சொன்னதற்காக தாயின் பாராட்டும் அன்பும் கிடைத்ததே அதுதான் அந்த மன ஆறுதல். இது கண்டிப்பாக அவளை இனியும் பொய் சொல்ல தூண்டாது. அதே நேரம் ஜெனிஸின் தாய்க்கு தன் மகள் தப்பு செய்தபோது அவளது தப்பை அவள் உணர்ந்துகொள்ளும் படி அவளை தண்டிக்கவும் முடிந்தது.

அப்துல்லாஹ் இப்னு ஆமிர்  அவர்கள் சொல்லும் சம்பவம் ஒன்றை இமாம் அபூ தாவுத் அவர்கள் தனது நூலில் பதிவு செய்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதுவர் அவர்கள் எனது வீட்டுக்கு வந்திருந்த ஒரு சமயம் என்னை எனது தாய் 'இங்க வாங்க மகன் ஒரு சாமான் தருகிறேன்' என்று என்னை அழைத்தார்கள். அப்போது அதனை கேட்டுக் கொண்டிருந்த அல்லாஹ்வின் தூதுவர் 'அப்படி என்ன கொடுக்க விரும்பினாய்?..' என்று கேட்டார்கள். அதற்கு என் தாய் 'ஒரு பேரீத்தம் பழம்' என்று பதில் சொன்னார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதுவர் 'நீ இப்படி அவனை அழைத்து அவனுக்கு எதுவும் கொடுக்காது விட்டிருந்தால் ஒரு பொய் சொன்னதற்கான கூலி கிடைத்திருக்கும்' என்று விளக்கினார்கள்.

நாம் அடிக்கடி சில சங்கடங்களை தவிர்க்கவும் சமாளிக்கவும் நம்மை அறியாமலேயே இப்படி பெரும்பாலும் பேசி விடுகிறோம். அதன் பாரதூரங்களை நாம் உணர்வது கூட இல்லை. ஆனால் அவை நமது பிள்ளைகள் விடயத்ததில் அவர்களின் நடத்தைப் பண்புகளில் கண்டிப்பாக பாதிப்புகளை உண்டுபன்னுகிறது என்பதை நாம் புரிந்து கொள்வதுடன் அதற்காக நமக்கு கிடைக்கும் பாவக்கணக்கிற்காக நாம் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடியாக வேண்டியுள்ளது என்பதனை நினைவில் கொள்வோம்.

திரும்வவும் பேசலாம்...

துணை நூல்: 
1. 'அல் இன்ஸாதுல் இன்இகாஸி' – முஹம்மத் றாஷித் திமாஸ், தார் இப்னு ஹஸ்ம் பதிப்பகம், 
2. இணைய தள கட்டுரைகள்.



Monday, July 29, 2013

நளைக்கும் நிலவு வரும்...

அந்த பாட்டியை அறியாதவர்கள் இருக்கமுடியாது. அனைவரது மனங்களிலும் அவள் நிறைந்து இருக்கிறாள். எல்லோரும் அவளைப்பற்றி ஒரே விதமாகவே சொல்வார்கள். அந்த அளவுக்கு அவள் பிரபல்யமாக இருந்தாள். எனது இரண்டரை வயது மகனுக்கே அவளைப் பற்றி தெரிந்திருக்கிறது. அவள் பேஸ்புக், டுவிட்டர் என்றெல்லாம் அவள் பிரபல்யம் அடையவில்லை. இருந்தாலும் அனைவருக்கும் அவளை தெரிந்திருக்கிறது. எனது இரண்டரை வயது மகனுக்கே அவளைப்பற்றி தெரிந்திருக்கிறது. நான் என் மகனின் வயதில் இருந்தபோதே அவளைப்பற்றி எனக்கும் தெரிந்திருந்தது. உலகமயமாக்கல், பின் நவீனத்துவும், மாக்ஸிஸம், புரொய்டிஸம், இஸ்லாமோபோபியா, வேல்டு டெரெரிஸம், வேல்டு இகொனொமி, சுனாமி, என்று எதுவும் அவளை பாதிக்கவுமில்லை. என்றும் போலவே அவள் இன்றும் தானுண்டு தன் தன் பாடு, தொழில் என இருந்து வருகிறாhள்.

எனது நண்பர் ஒருவர் வெளிநாட்டில் நல்ல வேலையில் இருக்கிறார். கை நிறைய சம்பளம் வாங்குகிறார். தான் மட்டுமென்று மட்டுமில்லாமால் பிறருக்கு உதவிகளையும் செய்து வருகிறார். ஆனாலும் அவரை ஊரவர்கள் நிறையப் பேருக்கு தெரியவில்லை. ஆனால் அவருக்கும் இந்த பாட்டியை தெரிந்திருந்தது.
ஆனால் இன்று அவள் எப்படி இருக்கிறாள்? அவளுக்கு எத்தனை பிள்ளைகள்? அவர்கள் ஏன் அவளை இந்த நிலைக்கு தள்ளினார்கள்? பெற்ற தாயை இப்படி வீதிக்கு விட அவர்களுக்கு எப்படி மனது வந்தது? அவளது கணவன் எப்படி இறந்தான்? என்ற கேள்விகள் எனக்கு அடிக்கடி மனதில் எழுகின்றது. நோன்பு நாட்களில் அவளும் வீடு வீடாய் திரிந்து அரிசி, பணம் என்று வாங்குவாளோ?.. இதெல்லாம் என் கண் முன்னே வந்து நிற்க எனது மகனே காரணம்,

'வாப்பா?...பாட்டிட கதய சொல்லுங்க!'

பாட்டியின் கதையை வாழையடி வாழையாக சொல்லிவந்தவர்களும், கதையில் டுவிஸ்ட் வைத்தவர்களும் கூட அவளைப்பற்றி அவ்வளவாக அக்கறைப்பட்டதாக தெரியவில்லை. ஆமா கதையில் டுவிஸ்ட் வைத்தார்கள். பாட்டி வடை சுட்டுக் கொண்டு இருந்தவேளை சமயம் பார்த்து வடையை திருடப்பார்த்த காகத்துக்கு விழுந்தது ஒரு அடி. பாட்டி காகத்தை தடியால் விரட்டி விட்டாள். சோகமாய் பறந்து வந்த காகம் மரத்தில் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த நரி பாட்டியி;டம் போய் 'பாட்டி எனக்கு சரியான பசியாய் இருக்கிறது. விறகு பொறுக்கி தருகிறேன். வடை தருவாயா' என்று கேட்க அதற்கு பாட்டியும் சம்மதிக்க நரியும் ஒரு வடையை சம்பாதித்தது. திருட்டை விட்டு நரி உழைத்துச் சாப்பிட்ட கதை அது.

இவ்வளவெல்லாம் டுவிஸ்ட் வைத்தவர்கள் அவளுக்கு என்ன ஆனது என்று சொல்லவேயில்லை. ஆனால் அவர்கள் செய்ததெல்லாம் ஏமாற்றுப் பேர்வழியான நரியை உழைப்பின் சின்னமாக மாற்றியதுதான். அதுவே தற்போதய ஜனநாயக அரசியல் வழிமுறையாகவும் இருந்து வருகிறது. ஒரு பாட்டியின் வடைக்கதையிலேயே அரசியல் நடந்துள்ளது.

'வாப்பா?...பாட்டிட கதய சொல்லுங்க!'

எவ்லோரும் தங்கள் சொந்த இலாபங்களுக்காக பாட்டியை படாத பாடு படுத்தியிருக்கிறார்கள். இன்றும் அவள் பூரண நிலாவில் குந்தியிருந்து வடை சுட்டுக் கொண்டிருக்கிறாhள். சாதாரண மனிதர்களின் வெற்றுக் கண்களுக்கு புலப்பட்ட இந்த பாட்டியை எந்த வானியல் கருவிகளாலும் கண்டுபிடிக்க இயலவில்லை. இந்த சர்வலோகத்தின் நுட்பங்களையும் புதுமைகளையும் நவீன விஞ்ஞானம் இன்னும் முழுமையாக கண்டுபிடித்துவிட வில்லை என்பதற்கும், விஞ்ஞானம் தோற்றுப்போய் விட்டதற்கும் இதை விட வேறு என்னதான் சான்று சொல்ல முடியும்.

'வாப்பா?...பாட்டிட கதய சொல்லுங்க!'

ஒரு ஊர்லயாம் ஒரு பாட்டி வடசுட்டு வியாபாரம் செய்து வந்தாளாம். அவ ரொம்ப நல்ல பாட்டியாம். கொஞ்ச நாள் பாட்டி நிலாவுலயம் வட சுட்டு வித்து வந்தாங்களாhம். அவங்க வட சுட்டு வந்த இடத்துக்கு பக்கத்துலதான் அமெரிக்காக் காரன் டென்ட் அடிச்சு ஆராய்ச்சு பன்னினானாம். அவனுகள்தான் பாட்டியை அந்த இடத்தை விட்டு விரட்டினாங்களாம். மக்களை அவங்கட சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றும் வழமை அப்போதிருந்தே அவர்களுக்கு இருந்திருக்கிறது. பாவிகள்! பாட்டியை நிலாவில் கண்டதையும் அவர்கள் மறைத்து விட்டார்கள். ஏதோ அவர்கள் தான் நிலாவில் காலை வைத்தததாக ஊருக்கும் மக்களுக்கு கதை சொல்லி விட்டார்கள். அங்கிருந்து மிகவும் சிரமப் பட்டு இங்க வந்த பாட்டியை மாமூல் கேட்டும் கடையை கொள்ளையடித்தும் அவளை கஷ்டப்படுத்தியிருக்கிறார்கள் இந்த ஊரிலுள்ள காகங்களும் நரிகளும். இவ்வளவும் செய்து விட்டு 'உழைப்பின் சிகரம்' என்ற அடைமொழிகூட வைத்துக் கொண்டு சுற்றித்திரிகிறார்கள். இந்த ஊர் மக்களும் பாவம் எத்தனைபேர்தான் அவர்களை நம்பவைத்து கழுத்தறுப்பார்கள். அதனால்தான் இந்த மக்களுக்கு பாட்டியின் மீது யாருக்கும் பரிதாபமோ இரக்கமோ ஏற்படவில்லை.

ஆண்டவன் பொறுமையாளிகளை கைவிடுவதில்லை. இத்தனை காலமும் வடைசுட்டு விற்று சிறிது சிறிதாக பாட்டி பணம் சேர்த்து வந்தாள். இன்னும் அவள் தெம்பாகவே இருக்கிறாள். தான் சேர்த்து வைத்திருந்த பணத்தையெல்லாம் வைத்து பாட்டி ஹஜ் யாத்திரை சென்று வரலாம் என்று முடிவு செய்தாள். 'ஆண்டவனே! என்ட உசிரு அந்த புனித மண்ணுலதான் போகனும்' என்று எப்போதும் துஆ செய்வாள். ஆனால் அவள் சேர்த்து வைத்திருந்த பணத்தை வைத்து ஹஜ் பயணம் போக முடியாது என்று சொல்லி விட்டார்கள் இந்த ஊரின் ஏஜென்ஸிக்காரர்கள். அது மட்டுமில்லாமல் அதற்கு இப்போது 'அப்லிகேசன்' அது இது என்று நிறைய சிக்கல்களை சொல்லிக்காட்டி அவளை மனம் தளர வைத்தார்கள். இருந்தாலும் தைரியமும் மனவுறுதியும் கொண்ட பாட்டி தன் முடிவை மாற்றிக் கொண்டாள்.

தான் சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டு 'உம்றா' செல்ல முடிவெடுத்து இப்போது அவள் உம்றா சென்றிருக்கிறாள்' என்று நான் சொல்லி முடிக்க எனது மகன் தூங்கிவிட்டிருந்தான்.
இனி நாளைக்கும் அவன் கதை கேட்பான். எப்போதும் போல கதையை முடிக்க முன்பே அவன் தூங்கி விடுவான். இப்படியே நாம் வாழ்வு தொடரப்போகிறது...

Friday, December 25, 2009

குழந்தைகளிடம் தேசப்பற்றினை வளர்த்தல்


“தேசப்பற்றும் ஈமானில் ஒரு பகுதி.” இஸ்லாம் கற்றும் தரும் மிக முக்கிய படங்களில் ஒன்று. அது இன, மத, சமூக, பொருளாதார பிரிப்புகளுக்கு அப்பால் அனைவரையும் தேசம் என்ற மையப்புள்ளியுடன் இணைக்கின்றது. இஸ்லாம் ஒரு படி மேல் நின்று அதற்கு ஒரு ஆன்மீக வடிவம் கொடுக்கின்றது. இதன் மூலம் முஸ்லிம்களிடையே தேசப்பற்று என்பது ஒரு மார்க்கக் கடமையாகிறது. ஈமானில் ஒரு பகுதியாகின்றது. சமகாலத்தில் எம்மில் பெரும்பாலானவர்களிடத்தில் தேசப்பற்றுணர்வு மிகக்குறைவு. இல்லெயென்று என்று கூடச் சொல்ல முடியும். கிரிகட் விளையாட்டு என்று வரும் போது நாம் தீவிர ஆதரவு காட்டுவதனை தேசப்பற்று பற்று என்ற வரையரைக்குள் முற்றுமுழுதாக கொண்டு வருவது தவறாகும். தேசப்பற்று என்ற உணர்வுநிலைப்பட்ட ஒரு வார்த்தை நாட்டின் ஒவ்வொரு பிரஜையிடமும் வேண்டிநிற்பதுவும் அதுவல்ல. விளையாட்டு ஒன்றுடன் எமக்குள்ள ஆர்வம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்தது. அது தற்சமயம் தேசநிலைப்பட்டு நிற்பதற்கும் தேசப்பற்றுடன் சேர்த்து நோக்கப்படுவதற்கும் சர்வதேச அரங்கில் எம் தாய் நாட்டின் பெயரை கொண்டு சென்று நிலை நிறுத்தி அசைக்க முடியாத ஒரு இடத்தில் வைத்திருப்பதற்கு விளையாட்டு பிரதான காரணமாகிவிட்டதே மிக முக்கிய காரணமாகும். இதனை நாம் தவறு என்று சொல்லமுடியாது. அந்த அளவிலாவது தேசம் என்ற மையப்புள்ளிக்கு அனைவரும் இணைவது முக்கியமானதாகும். நாம் இங்கு இது பற்றிய வாதவிவாதத்திற்கு வரவில்லை. எமது மனட்சாட்சிப்படியும், வெளிப்படையான யதார்த்த நிகழ்வுகளின் படியும் எம்மிடம் தாய்நாடு, நம் நாடு, என் தேசம், நம் தேசம் என்ற உணர்வு நிலை ஒப்பீட்டளவில் பெரும்பாண்மை சமூகங்களை விட குறைவு. தேசப்பற்று எந்த சமூகத்திடம் விகிதாசார அளவில் அதகளவு யாரிடம் காணப்படுகிறது என்பதற்கு அப்பால் நாம் ஒரு முக்கிய மார்க்க கடமையை தவறவிடுகின்றோம் என்று நிலைப்பாட்டில் ஒத்துழைப்பது நாம் சொல்ல வரும் விடயத்தினை நோக்கி அனைவரையும் நெருங்கக் கொண்டுவரும்.
அடிப்படையில் அடுத்த குறிப்பாக பெரும்பாண்மை இனத்து சகோதரர்களிடம் நாம் ‘வந்தேறு குடிகள்’ என்ற கருத்து நிலைப்பாடு காணப்படுகிறது என்பதில் சந்தேகமில்லை. இந்த நிலைப்பாடே அவர்கள் எம்மை நிருவாக ரீதியாகவும், பௌதீக வள ஒதுக்கீடுகளிலும், அரசியல் பொருளாதாரம் போன்ற இன்னோரன்ன அம்சங்களில் நாட்டின் பிரஜை என்ற அவளவில் கூட நோக்க தவறுகின்றனர். அவர்களின் நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையில் எம்மில் பலரது செயற்பாடுகள் அமைந்து விடுகிறது. பெரும் குற்றச் செயல்களில் பேதமின்றி அனைத்து சமூகங்களை சார்ந்த தனிநபர்கள் ஈடுபட்டாலும் எமது சகோதரர்கள் என்று வரும் போது அது மிகவும் வெளிப்படையாக பிரஸ்தாபிக்கப்படுகிறது. இந்த மாதிரியான நிலைகளில் அவை வேண்டுமென்ற சதி என்று பேச்சளவில் நிறுத்திக் கொள்கின்றோம். அதற்கு மேல் சிந்திப்பதற்கும் இவ்வாறான நிலைப்பாட்டுக்கான அடிப்படை காரணத்தை அறியவும் தவறிவிடுகின்றோம். இந்த தவறான உணர்வு நiலைப்பாட்டினை ஏனைய சமூகங்களிடம் இருந்து மாற்றுவதற்கு நாம் நடவடிக்கை எடுப்பதில்லை.

முதலில் நாம் தேச உணர்வு நம்மில் வளர்க்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் ஒன்று பட வேண்டும். இந்தக் கருத்து நிலையில் இருந்து கொண்டு நாம் எம் தலைப்புக்கு வருகின்றோம். கல்வி நடவடிக்கை என்று சொல்லும் போது இடை நடுவில் இருந்து இக்கருத்தினை விதைப்பதை விட பாலர் கல்வியில் இருந்து ஆரம்பிப்பது மாறுபட்ட கருத்தாங்களால் பாதிப்புக்குள்ளாகாத உள்ளத்தில் தேச சிந்தனையை விதைப்பது தேசத்தின் மீதுள்ள பற்று அவர்களின் வயதுடன் இணைந்து வளரவும் தேசப்பற்றுமிக்க இஸ்லாம் விரும்பும் பிரஜைகளாக அவர்கள் மாறுவதற்கும் அது வழிகோலும். ஏனைய சமூகங்களை விட எம் சமூக அங்கத்தவர்களாகிய நம்மில் எத்தனை பேருக்கு தேசிய கீதம் ஞாபகத்தில் இருக்கிறது என்பது எம் மனட்சாட்சியைத் தொட்டுப் பார்த்தால் தெரியும். எமது முஸ்லிம் பாடசாலைகளில் ஏதாவது நிகழ்வுகளுடன் மட்டும் மனப்பாடமிட்டு மேடைகளில் ஒப்புவிப்பதுடன் தேசிய கீதம் எம் சிந்தைகளை விட்டு அகன்று விடுகின்றது. தேச உணர்வு எம்மில் மிகைத்து காணப்படுவது நாம் இந்த தாய்நாட்டின் பிரஜை என்ற வகையில் அதற்கு செய்ய வேண்டிய கடமை எவ்வளோ இருக்கிறது என்ற உணர்விணை எம்மில் தினமும் தந்து கொண்டிருக்கும். நாம்

ஒரு சிறு கற்பணைக்குச் செல்வோம். ஒரு தேசப்பற்று மிக்க குடிமகன். அவனது சூழல் சார்ந்த செயற்பாடுகள் அவனது சுயநலத்துக்கும் தனிப்பட்ட பொருளாதார இலாபங்களுக்கும் அப்பால் நாடு, சூழல், எதிர்காலச் சந்ததி என்ற பொது நிலையான மிகவும் ஆரோக்கியமான ஆன்மீகம் நிறைந்த சிந்தனை அவனை ஆட்கொண்டிருக்கும். அவனிடம் இருந்து எப்போதும் நல்லதையே நாம் எதிர்பார்க்க முடியும். அவன் ஒரு ஆசிரியனாக இருந்தால் இந்த நாடு வளமுடன் மிளிர எவ்வகையான பிரஜைகள் உருவாக வேண்டும் என்ற எண்ணம் அவனிடம் மிகைத்து இருக்கும். அவனது பங்குக்கு அவனால் அப்படிப்பட்ட பிரஜைகளை பயிற்றுவிக்க அது உதவும். இது ஒரு மிகப்பெரிய தஃவாவாகும். ஓவ்வொருவரும் தனது ஆளுமைக்குட்பட்ட வகையில் தஃவா செய்வது என்று சொல்லுவதும் இதுவே. இஸ்லாம் தேசப்பற்றினை ஈமானின் பகுதியாக ஆக்கியிருப்பதன் எதிர்பார்ப்பும் அதுவே.

ஒரு தேசப்பற்று மிக்க அரசியல் வாதியால் நாட்டுக்கு வளமிக்க திட்டங்களை அமுல்படுத்துவது எவ்வளது இலகு. ஒரு திட்ட அமுலாக்கத்தில் தனிப்பட்ட இலாபங்களை அவன் கருத்தில்கொள்வதை விட தேச நலன் என்ற உணர்வு அவனை மிகைத்திருக்கும். இலஞ்சம் என்ற வார்த்தைக்கு அங்கு கண்டிப்பாக இடமிருக்காது. தேசநலன் சார் நடவடிக்கைகள் அனைத்திலும் அதனை யார் முன்னெடுத்தாலும் அவனிடம் காணப்படும் தேச உணர்வு தானாகவே அவனை முன்தள்ளி அந்த நடவடிக்கைகளில் அவனையும் ஒரு பங்காளியாக்கும்.. நான் செய்தேன் என்ற சுய பெருமையை அவனிடம் நீக்கி நான் இந்த தாய் நாட்டுக்கு செய்ய வேண்டிய இன்னும் எத்தனையோ கடமைகள் பாக்கியிருப்பதாக அவனுக்கு உணர்த்தும்.

வீதி அபிவிருத்தியில் ஒரு அரசியல் வாதிக்கும் அடுத்ததாக எத்தனையோ குட்டிக் குட்டிக் அரசியல் வாதிகள் இலாபாம் அடைந்து கொண்டு செல்கிறார்கள். அவர்கள் அனைவரும் தேச உணர்வு மிக்கவர்களாக இருந்தால் தனிப்பட்ட இலாபங்களுக்கு அப்பால் அவர்களின் மூலம் அமுல்படுத்தப்படும் வீதித்திட்டங்களின் ஆயுள் காலம், தரம் என்பன மிகைப்படுத்தப்படும். ஒரு சிறு மழைக்குக் கரைந்தோடும் அளவுக்கு திட்டத்தை சுய இலாபத்துடன் நிறைவேற்றுவதனை தவிர்க்கமுடியும். இதனால் தேசத்தின் பொருளாதாரம் விரயமாக்குவது தடுக்கப்படும். நாட்டின் பொருளாதாரம் விரயமாக்கப்படுவது தவிர்க்கப்டும் போது வாழ்க்கைச் செலவு குறைக்கப்படும் குறைந்த செலவில் தேவைகள் நிறைவேற்றப்படவும் குற்றச் செயல்கள் தடுக்கப்படவும் காரணமாக அமையும்.

இப்படியாக ஒவ்வொரு துறை சார்ந்தும் தொழிற்படும் ஒவ்வொரு பிரஜையும் இந்த தேச நலனை கருத்திற் கொள்ளும் போது நாட்டின் அபிவிருத்திக்கான ஒவ்வொரு பிரஜையினதும் பங்களிப்பு இயல்பாகவே வழங்கப்படுகிறது.

ஈமானின் ஒரு அம்சமான தேசப்பற்றினை குழந்தைப்பராயத்திலிருந்தே கல்வியியல் செயற்பாடுகளுடன் இணைத்து வழங்குவது அவர்கள் நல்ல பிரஜைகளாக உருவாவாதற்கு உதவும். அது ஈமானின் ஒரு அம்சமாக காணப்படுவதால் இதனை பாலர் பாடசாலைகள், குழந்தைகளுக்கான அல் குர்அன் பாடசாலைகள் என்பவற்றிலும் அவற்றினை போதிப்பதும் கண்டிப்பான ஒன்றாக மாறுகிறது. ஈமானின் அம்சங்கள் என எவற்றையெல்லாம் நாம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கின்றோமோ அவற்றுடன் தேசப்பற்றினையும் சேர்த்துச் சொல்லிக் கொடுக்க வேண்டியது இதனால் கடமையாகிறது.

பல நாடுகளின் அனுபவங்கள் எமக்கு இதனை நடைமுறைப்படுத்த துணைபுரியும். அறபு நாடுகளின் ஆரம்ப நிலை பாடப்புத்தங்களில் முதல் பாடமாக தேசப்பற்று அமைந்து காணப்படுகிறது. எமது நாட்டிலும் இதனை நாம் காணமுடியும். ஒரு வித்தியாசம். நாம் நாட்டின் பாடப்புத்தகங்களில் தேசிய கீதத்தினை மட்டும் பிரசுரிக்கப்பட்டிருக்கும். அதனை கற்பிக்கும் ஆசிரியர்களும் அதுபற்றிச் சொல்வதும் இல்லை. நடைமுறையில் பாடப்புத்தகங்களில் காணப்படும் மேலதிக பக்கமாகவே காணப்படுகிறது. அறபு நாடுகளின் அனுபவங்கள் பின்வருமாறு அமைகின்றது. ஆங்குள்ள பாடப்புத்தகங்களின் முதல் பாடமாக தேசப்பற்றுடன் தொடர்பான ஒரு பாடமாக அமையும். அது கண்டிப்பாக தேசிய கீதமாக அமைவதில்லை. ஆரம்பநிலை பாடப்புத்தகங்களில் வயது மட்டத்திற்கு ஏற்ற வகையில் அது ஒரு சிறு கவிதையாக அல்லது பாடலாக அமைந்து காணப்படும். ஒரு குழந்தையின் பாடசாலை வாழ்வின் துவக்க நாளிலேயே தேசம் பற்றிய பாடம் அவர்களுக்கு போதிக்கப்படுகிறது. இது எமக்கு ஒரு நல்ல அனுபவம். மேலை நாடுகளின் போதனா முறைகள் பற்றியும் குழந்தைகளுக்கு தேசப்பற்றினை ஊட்டுதல் என்ற முறைமைகள் பற்றிய தேடுகையின் போதும் மூன்று விதமான அனுபவங்களை அவர்கள் எம்மோடு பகிர்ந்து கொள்கின்றார்கள். ஒன்று: தேசியக் கொடி இரண்டு: தேசிய கீதம். மூன்று: தேசிய தினம் இந்த மூன்று அனுபவங்களையும் பகிந்து கொள்வதற்காக அந்தந்த நாடுகளுக்கான விஷேட தினங்கள் மிக முக்கியமாக நினைவு கூரப்படுகின்றன. நாம் இங்கு ஆரம்ப நிலை கல்வியில் அல்லது பாலர் மற்றும் ஆல் குர்ஆன் பாடசாலைகளில் தேசப்பற்றினை கற்பித்தல் முறைமை பற்றி பேசுகின்றோம். இங்கு வரலாற்றுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை. உதாரணமாக நம் நாட்டைப் பொறுத்த வரையில் யார் இலங்கைக்கு முதல் வந்தார்கள் என்று தொடங்கி வெள்ளையர்கள் எம் நாட்டின் மீதான காலனித்துவத்தினை நீக்கிக் கொண்டது வரையான வரலாறு தொடர்கிறது. தேசப்பற்று என்பது வரலாற்றினையும் மையப்படுத்திக் கொடுக்கப்படத் தேவையில்லை என்பது எமது கருத்து. தாய் நாட்டின் மீதான பற்றும் நேசமும் குழந்தைகளிடம் பெற்றோர் முதற் கொண்டு பாடசாலை வரை குழந்தைகளுக்கு கடத்தப்பட வேண்டும். சில மாதிரி செயற்திட்டங்களுக்கான ஆலோசனைகளை நாம் இங்கு பகிர்ந்து கொண்கின்றோம். தேசியக் கொடி தாய்நாட்டின் கொடி பற்றி அறிமுகம் குழந்தைகளிடத்தில் காணப்படுவது முக்கியமாகும். நாட்டின் சின்னமாக விளங்கும் தேசியக் கொடியின் உருவ மாதிரி முதற்கொண்டு அதன் உட்பொதிவுகள் உணர்த்தும் அம்சங்களை ஓரளலவிலேனும் வழங்க வேண்டும். நம் நாட்டின் இனப்பலவகைத் தன்மையினையும் அதனை நம் தேசியக் கொடி உணர்த்தி நிற்பதனையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். அரசியல், இன பாகுபடுக்கு அப்பால் இந்நாட்டின் பல்வகைத்தன்மையினை ஏற்கும் மனப்பான்மையினை இதன் மூலம் வளர்க்கும் வகையில் கற்பித்தல் அனுகுமுறைகளை அமைத்துக் கொள்ள முடியும். தேசியக் கொடியினை வரைவதற்கு பயிற்றுவிக்க முடியுமாயின் அதுவும் ஆரோக்கியமான ஒன்றாக அமையும். அதற்கான பயிற்சி முறைகளையும் முறைசார்ந்து வளங்க முடியும். ஒரு தேசியக் கொடிக்கிருக்கும் முக்கியத்துவத்தையும் அதற்கு வழங்க வேண்டிய மரியாதை என்ன என்பதற்கு பயிற்று விப்பாளர்கள் முறைசார்ந்து வகுத்துக் கொள்ள வேண்டும். தேசிய கீதம் தேசிய கீதம் என்பது அனைவரும் நினைவில் வைத்திருக்க வேண்டிய ஒன்று என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. நம் நாட்டின் தேசிய கீதத்தின் மொழிபெயர்ப்பினை நாம் கற்பிக்க வேண்டும். குழந்தைகள் என்று வரும் போது அவர்களுக்கு அதனை மனப்பாடும் செய்வதும் எல்லா குழந்தைகளுக்கும் ஒரே நேரத்தில் சாத்தியப்படாது. தேசிய கீதத்தின் ஒரு பகுதியை பயிற்றுவிப்பாளர்கள் தொடர்ந்து சொல்லிக் கொடுப்பதன் மூலம் அதனை சம அளவில் எல்லா குழந்தைகளுக்கும் பயிற்றுவிக்கலாம். குழந்தைகளின் அறிவுத்தரம், வாழும் குடும்ப சூழல், பெற்றோரின் முயற்சி என்பவற்றினடிப்படையில் தேசிய கீதத்தினை முழுமையாக பயிற்றுவிக்கும் முயற்சிக்கு நகர முடியும். அதே வேளை மற்றுமொரு யதார்த்ததையும் நாம் கண்டிப்பாக மறந்துவிடக்கூடாது. அதுதான் தற்காலக் குழந்தைகள் அறிவுத்தரத்திலும், கிரகித்தல் தரத்திலும் நம்மைவிட பல மடங்கு முன் நிற்கிறார்கள் என்பது. அனைத்து பயிற்றுவிப்பாளர்களும் இதனை ஏற்றுக்கொள்வார்கள். அதற்கேற்றவகையில் முறைசார்ந்த மற்றும் முறை சாரா திட்டமிடல் மூலமூம் பயிற்று முறைகளை வகுத்துக் கொள்ள முடியும். தேசிய தினம். நாம் மேற்கூறிய இரண்டு அம்சங்களினது பயிற்றுவிப்பின் அறுவடை தினமாக பயிற்றுவிப்பாளர்கள் இதனை கருதவேண்டும். குறித்த தினத்தில் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து குறித்த தினத்தை அனுஷ்டிக்கின்றன என்பதனை காண்பிக்க முடியும். தேசிய தின நிகழ்வுகளை பாடசாலை அல்லது ஆல் குர்ஆன் பாடசாலைகளில் ஒழுங்கு செய்ய முடியும். பேற்றோரையும் வரவழைத்து இந்நிகழ்வினை செய்யும் போது குறைந்திருக்கும் தேசப்பற்றுணர்வினை தட்டியெழுப்பவும் அது துணைபுரியும். குழந்தைகளுக்கு தேசப்பற்றினை ஊட்டி வளர்த்தல் அல்லது பயிற்றுவித்தல் என்ற விடயத்திற்கான எமது சில அனுகுமுறைகளையே நாம் இங்கு பேசியிருக்கின்றோம். தேச உணர்வினை ஈமானில் ஒரு பகுதியாக இஸ்லாம் எமக்கு சொல்லித்தருவதே எமது இந்த முயற்சிக்கு காரணம்.

Thursday, April 30, 2009

மைமூன் கோழி

அண்டசராசங்களையும் கற்றுத் தேர்ந்த கலாநிதி நந்தலாலாவுக்கு திடீரென்று இது உதயமானது.
“நம்ம பெண்பிள்ளைகளுக்கு சிறந்த பாலியல் கல்வி ஆசிரியன் நம்ம வீட்டு நாட்டுக் கோழி''

(வாசகர்கள் பின்வருமாறு கருதிவிடக்கூடும்) சொல்லப்போனால் அது ஒன்றும் பெரிய வித்தை கிடையாது. இந்தக் காலத்தில் அதற்குப் பெரிய அவசியம் இருப்பதாக தெரியவில்லை. வீட்டிலிருந்தே பிள்ளைகள் அனைத்தையும் கற்றுவிடுகிறார்கள். வெள்ளித்திரைகள் அவற்றை வெள்ளமாக அள்ளித்தருகிறது. அனைவரும் அதனை சுனாமியாக நடைமுறைப்படுத்துகிறார்கள்.-
“நம்ம பெண்பிள்ளைகளுக்கு சிறந்த பாலியல் கல்வி ஆசிரியன் நம்ம வீட்டு நாட்டுக் கோழிசந்திரலேகா பின்வருமாறு திருவுளமானாள்! (தீவிர மதப்பற்றர்களின் கவனத்திற்கு:- கலாநிதி நந்தலாலா எவ்வளவு படித்திருந்தாலும் படிக்காத தன்மனைவியை மேதையாகவும், கண்ணியத்திற்குரியவளாகவும் கருதுகிறார். எனவேதான் கூறினாள், சொன்னாள் போன்ற வர்த்தைகளை அவர் சந்திரலேகாவுக்கு உபயோகிப்பதில்லை,)
:- அப்ப புரொய்லர் கோழி..
நந்தலாலா சொன்னார்:- விளையாடாத புள்ள..இது சீரியசான விசயம்.. “நம்ம பெண்பிள்ளைகளுக்கு சிறந்த பாலியல் கல்வி ஆசிரியன் நம்ம வீட்டு நாட்டுக் கோழி''
:-எப்பிடி
:- குட்…இது அறிவுள்ளவர்களின் தெரிவு..
எங்கள் வீட்டுக் கோழி மைமூன்…வாங்கி வளர்த்தோம். கூடவே அதன் மச்சானையும்..எங்கட வீட்டுக்கு வந்தப்பிறகுதான் அவங்களுக்கு கலியானமே நடந்தது.
எங்கள் வீட்டிலிருந்து எப்போதும் லைவ் அப்டேட் கிடைக்கும்.
உம்மா:- அவன் இன்டைக்கு மைமூன மிரிக்கிறதுக்கெண்டு துரத்தித் துரத்திக் கொத்திப்போட்டான். மைமூன தூக்கி ரெண்டு நாளைக்கு அடச்சி வக்கனும்..
தங்கச்சி சொல்லுவா:- அன்டும் இப்பிடித்தான்..நமக்கென்ன..பிறகு எப்பிடி மைமூன் முட்ட தருவா?..
நந்தலாலா ~~ஒவ்வொரு வீட்டிலும் நாட்டுக் கோழி வளர்த்ததால்தான்..நம்முன்னோர்கள் பாலியல் கல்வியை அவர்களின் பிள்ளைகளுக்கு ஊட்டினார்கள்..சேவல், போடு..கோழிமிரித்தல்..அடைகாத்தல்..முட்டை போடல்..அடைவைத்தல்..அடைகாத்தல்..குஞ்சு பொரித்தல்..ப்பா..ஒரு வாழ்க்கைச் சக்கரமே உருள்கிறது..
உங்கட டீச்சர் லோகமாதாவின் பாஷையில் ~இது முறை சாராக் கல்வி..''
சந்திரலோகா இடைமறித்தார்: அவ என்ன பாவம் செஞ்சா..
மைமூனுக்கு நாலு பிள்ளைகள் இருந்தார்கள்..ஒரு சேவல்..அவனுக்கு பெயரில்லை..எப்பவும் வாடா போடாதான்..எல்லா போட்டுக் கோழிகளும் மைமூன்தான். அந்த காலத்தில ராஜாக்களின் ஒரே மாதிரியான பெயரை முதலாம்..இரண்டாம்..மூன்றாம் என்று சொல்லுவாங்களே..அது மாதிரி..
ஆண் பெண் உறவு பற்றிய எவ்வளவு சூசகமாக பரம்பரை பரம்பரையாக கடத்தி வந்து..ம்ஹம்…புரொய்லர் கோழிகளின் வருகை நம் அறிவின் பாரம்பரியத்தை தடுத்தி நிறுத்தியுள்ளன..மலிவாகக் கிடைப்பதும்..விரைவில் வளர்ந்து விடுவதையும் பார்த்து…சொக்கிப் போய் நிற்கிறார்கள்..
சந்திரலேகா: இன்டக்கி கோழிதான் நம்ம வீட்டுலயும்…
(வாசகர்கள் மீண்டும் இப்படி நினைப்பர்) சொல்லப்போனால் அது ஒன்றும் பெரிய வித்தை கிடையாது. இந்தக் காலத்தில் அதற்குப் பெரிய அவசியம் இருப்பதாக தெரியவில்லை. வீட்டிலிருந்தே பிள்ளைகள் அனைத்தையும் கற்றுவிடுகிறார்கள். வெள்ளித்திரைகள் அவற்றை வெள்ளமாக அள்ளித்தருகிறது. அனைவரும் அதனை சுனாமியாக நடைமுறைப்படுத்துகிறார்கள்.
நந்தலாலா:- ~நாட்டுக் கோழி வீட்டில் இருக்கும் போது..அவற்றின் அன்றாட வேலைகள் பற்றிய அப்டேட் வீடுகளிள் பெண்களிடையே பேசப்படுகிறது. தொலைக்காட்சிகளில் ஆபாசமே சொல்லப்படும்..முறையான பாலியல் கல்வியை மனிதனுக்கு நாட்டுக் கோழிகளால் மட்டுமே கொடுக்க முடியும்..தொலைக்காட்சிகளில் வரும் ஆபாசக் காட்சிகள் பற்றி வீட்டிலுள்ள பெண்கள் விலாவாரியாக பேசுவதில்லை…நாட்டுக் கோழி பற்றிதான் பேசுவார்கள்..
இது பற்றிய ஆய்வு மண்றங்கள் நடத்தப்பட வேண்டும்..நூல்கள் வெளிவர வேண்டும்..என்று ஆசைதான்..எங்க நாம சொன்ன யாரு கேட்கப் போறா..ஒவ்வொரு அதிபருக்கும் 100 நாட்டு முட்டைகள் கொடுத்து அவர்களை இதற்கு ஊக்கமளிக்க சொல்ல வேண்டும்…ஒவ்வொரு பாடசாலை மாணவ மாணவிக்கு ஒரு நாட்டுக் கோழி..~2010ம் ஆண்டில் அனைவரிடம் நாட்டுக் கோழி” அந்த திட்டத்திற்கு இந்தப் பெயரை வச்சா நல்லா இருக்கும்..டீவி கொமர்சியல்ஸ், பேப்பர் விளம்மபரம் என்று நாட்டுக் கோழி வளர்ப்புக்கு ஊக்க மளிக்க வேண்டும்..
இந்த இடத்தில் சிந்திப்பதை நிறுத்திய நந்தலாலா..மறுபடியும் சிந்திக்கலானார்..
~~இந்த திட்டத்திற்கு அரசும், குடும்பக்கட்டுப்பாட்டு அமைப்புகளும் தடைவிதிக்குமோ..''
சந்திரலேகா:- கோழிக்குத்தான் முதல்ல பறவக்காச்சலாம்..நாட்டுக் கோழிக்கும் வரும்..2010ல் அனைவரிடம் நாட்டுக் கோழி..அதே வீட்டில் அனைவருக்கும் பறவைக்காய்ச்சல்..
~அப்படியானால்..நம் நாட்டுக் கோழிவளர்ப்புத் திட்டத்திற்கு சர்வதேச மட்டத்தில் எதிர்ப்பு இருக்கிறது..முதலில் எந்தெந்த நாடுகள் இந்த கோழி வளர்ப்பை தடைசெய்யலாம் என்று பாhடதடது அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் செய்ய வேண்டும்..சமரச உடன்பாட்டுக்கு வந்து..இதனை நடைமுறைப்படுத்தலாம்..ஆனால் இதற்று அரச உதவி தேவைப்படும்..உபாத்தியாயினி லோகமாதா இது பற்றிய சிறந்த ஆலொசனைகளை தருவார்..
சட்டென்று சிந்திப்பதை நிறுத்திய கலாநிதி அறிவாளியும் அழகியும் தன் மனைவியுமாகிய சந்திரலேகாவிடம்..டீச்சர்ர வீட்ட போயிட்டு வருவமா..
~அவ மாமியாட வீட்ட போயிட்டாவாம்..சாப்பாடாம்..50 கோழியாம்..ஓடர் குடுத்து சமைக்காங்களாம்..
~இது மிகப் பெரிய திட்டம்..உபகாரமானதும் கூட..புரொய்லர் கோழி தின்னும் அரச தனியார் அதிகாரிகள் இதனை ஆதரிப்பார்களா?..
அரசு யுத்தம் முடியட்டும் என்று சொல்லி விடும்..அரச அதிகாரிகள் இதற்கான மேலதிக அலவன்ஸ் கேட்பார்கள்..கொடுக்காது விட்டால் ஸ்ரைக்..அந்தப் பாவம் நம்ம தலையில் வந்து விடும்..தனியார் ஊழியர்களை கேட்க முடியாது..கம்பனி வேலைக்கு வெளியே அவர்களால் கோழி வளர்க்க முடியாது..வளர்த்தால் வேறு கம்பனிக்கு கோழி வளர்த்தான் என்று சொல்லி வேலையை விட்டு தூக்கி விடுவார்கள்..வீட்டு எஜமானிகளுக்கு வீட்டில் இடமில்லை..இளம் பெண்களுக்கு கோழிச்சாணம் பிடிக்காது..
ஒரு கோழிவளப்புத்திட்டத்தில் இத்தனை பிரச்சனைகளா..வேண்டாம் என்று நினைத்த கலாநிதி..ஒரு கதையை கதையை எழுதிவிடலாம் என்று நினைத்து..எழுதி முடித்ததார்..
“நம்ம பெண்பிள்ளைகளுக்கு சிறந்த பாலியல் கல்வி ஆசிரியன் நம்ம வீட்டு நாட்டுக் கோழி’’
முற்றிற்று 2009.05.01

Tuesday, April 1, 2008

கடவுளின் பாதையில்..



‘கலைத்துவிட முடியாத நிஷ்டையில் இருந்து அவர் இன்னமும் மீள எழாததால் அவரை மக்கள் விகாரையுடன் நிறுத்திவிட்டு அடிக்கடி சென்று தரிசித்து வந்தனர். நிஷ்டை கலைந்து நடமாடினால் இப்படித்தான் இருக்கும் என்று பார்க்க பிக்குகளை தோற்றுவித்தனர். இதனால், அவர்களையும் நிஷ்டை கலையாத மடத்திலேயே வைத்தனர். கலைத்துவிட முடியாத நிஷ்டை நிலையாத எய்துவிட அவர்களும் பிரயத்தனம் செய்தனர்.’
என்று சிந்தனை செய்தவாறு; அமைதியே குடிகொண்ட கண்களைக் கொண்ட அந்த மனிதர் அரச மரத்தை நோக்கி தன் கவனத்தைத் திருப்பினார்.
‘காற்றைக் கடவுள் வெற்றுக் கண்களுக்குப் புலப்படாத நீராக்கி அதனை போதி மரத்தினூடாக ஓட விடுவதால் எழும் சப்தமே போதி மரம் புன்னகைத்து நிற்கும் காட்சி’ என்று அவர் எண்ணிக்கொண்டார்.

இதனை நினைத்து ஒரு புன்னகையையும் வாயு மண்டலத்தில் உலவவிட்டார். அது நிஷ்டை கலையாத அவரின் முகத்தில் ஒட்டிக்கொண்டது. மக்கள் பக்தியுடன் கூறினர்.

‘சாது..சாது..சாது’

விகாரையை விட்டு வெளியேறிய அமைதியே குடிகொண்ட கண்களைக் கொண்ட அந்த மனிதர் விகாரையை உண்டியலைக் கண்டார். உண்டியலைச் சூழ விகாரைக்கு வரமுடியாதவர்கள் விட்டெறிந்த நாணயக் குற்றிகளையும் கண்டார். ‘கலைத்துவிட முடியாத நிஷ்டையை நாணயக் குற்றிகளின் சேர்க்கையினால் எழும் நாதத்தினால் கலைக்க இயலும் என்று நினைத்து என்றோ ஒரு நாள் கடந்துவிட்ட வரலாற்றின் ஒரு பக்கத்தின் வலது பக்க மேல் மூலையில் ஒருவர் செய்துவிட்ட முயறசியாக அது அமைந்திருக்க வேண்டும். கோடிக்கணக்கான நாணயக் குற்றிகளின் சேர்க்கை நாதம் இடிமுழக்கம் போல எழுந்து நிஷ்டையை கலைத்துவிடும் என்று எண்ணியிருக்கலாம்.’ என்று நினைத்துக் கொண்டார்.

சிதறிக்கிடந்த நாணயங்களை பொறுக்கி எடுத்தார். என்றுமே திறந்த வாயுடன் இருந்த உண்டியலில் போட்டுவிட நினைத்து அடி எடுத்து வைத்தார்.
பதபதப்பான ஒரு கரம் பற்றிப்பிடிக்க நின்றுவிட்டார். முதுமை ஏறிவிட்ட சாயம் போய்விட்ட ஒருத்தி. களங்கமில்லை என்பதற்காக வெள்ளையுடுத்திருந்தாh. கட்டை விரலும் சுட்டுவிரலும் அவரது கரத்தைப் பற்றியிருக்க ஏனைய விரல்கள் பற்றற்று நீண்டு வளைந்திருந்தது. நிஷ்டை நிலையில் இருப்பவரின் வலது கரமும் அப்படித்தான் இருக்கிறது என்பது சுருக்கென்று தோன்றி மறைந்தது.

‘மகன், மடியில் முடிஞ்சி வச்சிருந்த காசி தொலஞ்சிட்டுது. ஊருக்கு போகவேணும், பஸ்ஸ{க்கு காசில்ல, கொஞ்சம் காசி தாங்க மகன், ஆண்டவன் புன்னியம் தருவான்’
வசியம் செய்யப்பட்டவர் போல கையிலிருந்த காணிக்கைகளை அவரின் இரண்டு கைகளிலும் தினித்தார். அவளின் நன்றியை எதிர்பாராமல் திரும்பிய அவருக்கு கலைத்துவிட முடியாத நிஷ்டையில் இருந்தவரின் மயானக் கண்கள் மலர்ந்து மூடியதான உணர்வு ஏற்பட்டது. நிச்சயமாக கண்கள் திறந்தன என்று அவர் மனது சொன்னது. உள்ளிருந்து வந்த வார்த்தைப் பிரவாகம் மடையுடைத்த போது…

‘தெய்வமே! உன் நிஷ்டையை இப்படித்தான் கலைக்க வேண்டுமா?’

தன் இரு கைகளையும் உயரத் தூக்கி கை கூப்பினார். பின்னால் இருந்து யாரோ தட்டுவது போன்ற ஓரு உணர்வு.

‘இஞ்ச உள்ள போய்க் கும்புடு, பைத்திக் காரனைப் போல ரோட்டில நின்டு கத்துறாய். போ போ வழியில் நின்டு ரோட்ட மறிக்காத’
என்று நகர்ந்தார். ஒரு காவல் அதிகாரி.
அமைதியே குடிகொண்ட கண்களைக் கொண்ட அந்த மனிதர் திரும்பிப் பார்த்தார். கலைத்துவிட்டதாகத் தோன்றிய நிஷ்டை கலைக்க முயடியாததாக மாறிவிட்டதாகத் தோன்றியது.

இரண்டு அடிகள் சென்றுவிட்டு கடைசியாக திரும்பிப் பார்த்தார். யாரோ சிந்திய புன்னகை நிஷ்டை கலையாத அவரின் முகத்தில் முட்டி மோதி ஒட்டியிருக்க வேண்டும்.
மக்கள் சொன்னார்கள்.

சாது…சாது… சாது..

சுபம். மங்களம்.
2004.04.02
..........................................................
இக்கதை ஜாமிஆ நளீமிய்யாவின் மாணவர் சஞ்சிகையான ‘ராபிதா கலமிய்யா’ என்ற சுவர்ப் பத்திரிகையில் வெளியானது.

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP