குழந்தைகளின் நடத்தைப் பண்புகளை நெறிப்படுத்தல்
'உம்மாவும் வாப்பாவும் சேரந்துதான் பிள்ளையை யூதனாவகவோ கிறிஸ்தவனாகவோ மாத்திவிடுகிறார்கள். மத்தப்படி பிள்ளைகள் பிறக்கும்போது இறைவனின் நியதிப்படி ஈமானிய இயல்புகள் கொண்டதாகத்தான் பிறக்கின்றன.' – முஹம்மது பின் அப்துல்லாஹ், அல்லாஹ்வின் தூதுவர்.
இது அல்லாஹ்வின் பிரதிநிதியின் அல்லது இப்போதய அரசியல் பாஷையில் சொல்வதானால் அல்லாஹ்வின் தூதுவர் அல்லது ராஜதந்திரி சொன்னது. அரசுகளை பிரதிநிதித்துவப்படுத்தி மற்றொரு நாட்டுக்கு இன்னொருவரைத்தான் தூதுவராக அனுப்புவார்கள். அந்த ராஜதந்திரி அல்லது தூதுவர் சொல்லும் கருத்தும் பேச்சும் முழுக்க முழுக்க அவர்சார்ந்து வந்துள்ள அரசின் கருத்தாகவும் நிலைப்பாடாகவும் இருக்கும். இதனால்தான் தான் ஏதாவது நாடுகள் அல்லது அரசாங்கங்கள் தப்புப் பன்னும் போது அதனை பொறுக்காத மக்கள் அந்ததந்த நாடுகளின் ராஜதந்திர அலுவலங்கள் தூதுவராலயங்கள் முன்னால் நின்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு தமது வெறுப்பைத் தெரிவிக்கிறார்கள். அதன் அர்த்தம் மக்கள் தப்புப் பன்னும் அரசை மக்கள் வெறுக்கிறார்கள் என்ற செய்தி குறித்த அரசுக்கு செல்ல வேண்டும் என்பதுதான்.
அல்லாஹ்வின் தூதுவர் சொன்ன மேற்படி வாக்கும் அதனையே குறிக்கும். நம்மைப் படைத்த இறைவன் நம்மை எப்படி தயாரித்து இருக்கிறான் என்பதற்கான ஒரு குறிப்பு. ஒரு பொருள் எப்படி தயாரிக்கப்பட்டுள்ளது? அதன் உள்ளடக்கங்கள் என்ன? எப்படிப் பாவித்தால் அது பழுதடையும். தவறாகப்பாவித்து குறித்த பொருள் பழுதடைந்தால் அதற்கு தயாரிப்பாளன் பொறுப்பேற்கத் தேவையில்லை என்ற விளக்கங்கள் நாம் சந்தையில் வாங்கும் ஒவ்வொரு பொறுளுக்கும் இருக்கும். இதை நாம் நன்கு அறிந்து வைத்திருக்கிறோம். அதற்கு நாம் பழக்கப்பட்டும் விட்டோம்.
மனிதன் என்கிற அல்லாஹ்வின் தயாரிப்பும் அடிப்படையில் அவனுக்கு சிரம்தாழ்த்தும் இயல்புடன் அமைந்ததாக தயாரிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பில் எந்த தவறும் இல்லை. அது அவனுக்கு சிரம்தாழ்த்தாது மனிதன் செல்கிறான் என்றால் அது மனிதன் என்கிற பொருள் பாவிக்கப்பட்ட விதத்தில் அல்லது வளர்க்கப்பட்ட விதத்தில் ஏதோ பிழை நடந்திருக்கிறது என்பதுதான் அதன் அர்த்தம். அதற்கு படைத்தவன் அல்லாஹ் பொறுப்பேற்கமாட்டான் என்பதுதான் இதன் சாராம்சம்.
'உம்மாவும் வாப்பாவும் சேரந்துதான் பிள்ளையை யூதனாவகவோ கிறிஸ்தவனாகவோ மாத்திவிடுகிறார்கள். மத்தப்படி பிள்ளைகள் பிறக்கும்போது இறைவனின் நியதிப்படி ஈமானிய இயல்புகள் கொண்டதாகத்தான் பிறக்கின்றன.
பிறக்கும் போதே முஸ்லிமாகப் பிறந்த உம்மாவும் வாப்பாவுமாகிய நாம் நமது குழந்தைகளை எப்படியும் முஸ்லிமாகவே வளர்ப்போம் என்ற ஆறுதல் நமக்கு இருக்கும். ஆனால் இந்த தூதுவரின் வாக்கில் இன்னொரு மறைமுக எச்சரிக்கை இருப்பதாக எமக்கு விளங்குகிறது. உண்மையில் நாம் சொல்ல வந்த விடயமும் அதுதான். பொய்சொல்லுவதில், உண்மையை மறுப்பதில், திரிவுபடுத்துவதில், சந்தர்ப்பம் பார்த்து நழுவுவது, ஏமாற்றுவது, கூட இருந்து குழிபறிப்பது, தேவைப்பட்டால் கொலைசெய்வது போன்ற குணவியல்புகள் இந்த இரண்டு கூட்டத்தாரினதும் கூடப்பிறந்தவைகள். அவர்களைவிட்டு அவற்றை பிரித்துப் பார்க்க முடியாது. இந்த பண்புகள் முஸ்லிமாகவுள்ள நம்மிடமும் இருக்கவே செய்கிறது. முழுக்க இதை மறுக்கவும் முடியாது. இதில் நாம் பேச வந்தது என்ன வென்றால் இந்த குணவியல்புகள் நமது பிள்ளைகளிடம் வருவதற்கும் நாம்தான் காரணமாக இருக்கிறோம் என்பதுதான். இந்த எச்சரிக்கைதான் நாம் பேசவந்தது. இங்குதான் குழந்தைகள் முன்னிலையில் நாம் எப்படி சிறந்த முன்மாதிரிகளாக நடந்துகொள்ள வேண்டும் என்கிற அவசியம் எழுகிறது.
நம்மில் எந்தவொரு உம்மாவும் வாப்பாவும் வேண்டுமென்றே குழந்தைகளை தப்பான வழியில் அழைத்துச் செல்வதில்லை என்ற அடிப்படையை மனதில் கொண்டு நாம் பேசுவோம்.
உண்மைபேச குழந்தைகளை ஊக்குவிப்போம்
இதற்கு ஒரே வழி உம்மா வாப்பாவாகிய நாம் உண்மைபேசுவதை பழக்கமாகக் கொள்வதுதான். (ஆங்கிலத்தில் படித்த ஒரு சம்பவம்) 'கிறிஸ்' மற்றும் அவனது நண்பன் 'போல்' இருவரும் சிறுபிள்ளைகள். ஒன்றாகவே எப்போதும் விளையாடுவார்கள். சில நாட்களாக இருவருக்குமிடையிலும் கடும் சண்டை. இதனை அவதானித்த 'கிறிஸ்'ஸின் தாய் 'கரோல்' சில நாட்களுக்கு இருவரையும் ஒன்றாக விளையாடவிடாமல் வைத்திருந்தால் நல்லது என்று முடிவெடுத்தாள். வழமை போல 'கிறிஸ்' ஐ வீட்டுக்கு தனது மகனுடன் விளையாட அனுப்புமாறு 'போல்' இன் தாய் தொலைபேசியில் சொன்னபோது, கரோல் தனது மகனுக்கு சுகமில்லை. அதனால் இன்று அவனை விளையாட அனுப்பமுடியாது என்று சொல்லிவிட்டாள்.
இதனை கேட்டுக் கொண்டிருந்த 'கிறிஸ்' அதிர்ச்சியடைந்து 'எனக்கு சுகமில்லையா? என்னம்மா நடந்தது?..என்று கேட்டான். அவன் பயந்திருப்பது கண்டு குழம்பிப் போன 'கரோல்' ..ஒன்டுமில்ல தங்கம்...சும்மாதான் அப்பிடி சொன்னேன்..போலின் தாய் வருத்தப்படுவாங்க இல்லயா..அதுதான் அப்படி சொன்னேன்' என்று சொல்லிவிட்டு சில நேரங்களில் சங்கடங்களை தவிர்ப்பதற்காக இப்படி சொல்ல வேண்டி வந்துவிடுகிறது என்று அவனுக்கு பாடம்; எடுக்க ஆரம்பித்தாள்.
ஆனால், உண்மையில் 'கிறிஸ்'ஸிற்;கு இந்த விளக்கங்கள் புரியவில்லை. அவன் புரிந்துகொண்டதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். 'தேவைப்படும் போது இந்தமாதிரி 'எடுத்துவிடுவதில் ஒன்றும் தப்பில்லை. அதைத்தான் பெரியவர்கள் செய்கிறார்கள்' என்பதுதான்.
எப்பவுமே நமது பிள்ளைகள் நம்மை அடியொட்டியே வளர்கிறார்கள். பொய்களை சொல்வதற்கு அல்லது உண்மைகளை மறைக்க நாமே அவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி தரக்கூடாது. இப்படி நமது வீடுகளில் அடிக்கடி நடப்பதுண்டு.. 'வாப்பாக்கிட்ட சொல்லதீங்க..நான் உங்களுக்கு சாக்லேட் வாங்கி தாரேன்..'. 'உனக்கு சாக்லேட் வாங்கி தந்ததை வீட்டபோனதும் தங்கச்சிக்கிட்ட சொல்லாத...'. ஒரு தவறை மறைத்து அப்புறமாக சரி செய்து கொள்ளலாம் என்பதற்காக இப்படி நாம் சில நேரங்களில் நடந்துவிடுகிறோம். வளர்ந்தவர்களாகிய நாம் எதுவித தயக்கமும் இன்றி நமது வீடுகளிலே உண்மைகளை பேசுவதனை நமது பிள்ளைகள் பார்க்கும் சந்தர்ப்பங்களை நாம் ஏற்படுத்திதரவேண்டும்.
கிறிஸ்ஸின் தாய் கரோல் இப்படி சொல்லியிருக்கலாம். ' இல்லங்க இன்றைக்கு வேண்டாம்.. தொடர்ந்து சண்டையே பிடிக்கிறாங்க..கொஞ்ச நாளைக்கு வேணாமே' என்று பேசியிருந்தால் தாய் பேசுவதனை கேட்டுக் கொண்டிருந்த 'கிறிஸ்' ..நாம் சண்டை பிடித்ததால்தான் இதெல்லாம் நடப்பதாக யோசித்திருக்க வாய்ப்புண்டு.
அடுத்தது, பொய் சொல்லுகிறார்கள் என்பதற்காக கத்திக்கூப்பாடு போடுவதும் ஒரு நல்ல வழிமுறை அல்ல. அது அவர்களை உண்மை பேச தூண்டாது. இன்னுமொரு நிகழ்வைப் பார்க்கலாம். 4 வயதேயான சிறுமி, ஜெனிஸ், வீட்டின் அறையில் விளையாடிக் கொண்டிருந்த போது அந்த அறைக்குள் அவளது தாய் நுழைகிறாள். அங்கு வைக்கப்பட்டிருந்த பூச்சாடியில் இருந்த செடியின் கிளைகள் ஒடிந்திருப்பதனை கண்டதும் அவளுக்கு கோபம் பற்றிக்கொண்டு வந்தது. இதற்கு முன்னர் ஜெனிஸ் தனது விளையாட்டு பொம்மையை அந்த செடியில் ஏறுவதற்கு பழக்குவது போல விளையாடிக் கொண்டிருந்தது கண்டு அப்படி விளையாடுவதற்கு அந்த செடி உறுதியானது அல்ல என்பதை அவளது தாய் அவளுக்கு சொல்லியிருந்தாள். ஆனால் தாய் கேட்டதற்கு அது அவர்கள் வீட்டு நாய்க்குட்டிதான் செடிக்கு மேல் பாய்ந்ததாக ஜெனிஸ் சொல்லிவிட்டாள்.
இந்த இடத்தில் ஜெனிஸின் தாய் கொஞ்சம் புத்திசாதுரியமாக நடந்து கொள்கிறாள். அவள் ' சரி ஜெனிஸ்..இதுக்கு மேல எனக்கு உன்ன திட்டமுடியாது..கொஞ்சம் நல்லா யோசிச்சு என்ன நடந்திச்சு என்று சொல்லு' என்று சொன்னதும் சிறிது யோசித்து விட்டு அதை தானே செய்ததாக ஜெனிஸ் ஒத்துக் கொள்கிறாள். அதன் பின்னர் அவளது தாய் அவளை திட்டாமல் அவளுடன் சேர்ந்து அறையை சுத்தம் செய்ய வைத்ததோடு அன்றய தினம் ஜெனிஸை தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்கவில்லை. அதே நேரம் அவள் உண்மை சொன்னதற்காக தனது மகளை பாராட்ட வேண்டும் என்பதையும் அவள் மறக்கவில்லை. உண்மையாக இருப்பது என்பது அவ்வளது எளிதல்ல என்பதை இது உணர்த்தினாலும் உண்மை சொல்வதால் ஜெனிஸூக்கு ஒரு மன ஆறுதலும் கிடைக்கிறது. கிடைக்கவிருந்த பெரும் தண்டனை குறைக்கப்பட்டதுடன் உண்மை சொன்னதற்காக தாயின் பாராட்டும் அன்பும் கிடைத்ததே அதுதான் அந்த மன ஆறுதல். இது கண்டிப்பாக அவளை இனியும் பொய் சொல்ல தூண்டாது. அதே நேரம் ஜெனிஸின் தாய்க்கு தன் மகள் தப்பு செய்தபோது அவளது தப்பை அவள் உணர்ந்துகொள்ளும் படி அவளை தண்டிக்கவும் முடிந்தது.
அப்துல்லாஹ் இப்னு ஆமிர் அவர்கள் சொல்லும் சம்பவம் ஒன்றை இமாம் அபூ தாவுத் அவர்கள் தனது நூலில் பதிவு செய்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதுவர் அவர்கள் எனது வீட்டுக்கு வந்திருந்த ஒரு சமயம் என்னை எனது தாய் 'இங்க வாங்க மகன் ஒரு சாமான் தருகிறேன்' என்று என்னை அழைத்தார்கள். அப்போது அதனை கேட்டுக் கொண்டிருந்த அல்லாஹ்வின் தூதுவர் 'அப்படி என்ன கொடுக்க விரும்பினாய்?..' என்று கேட்டார்கள். அதற்கு என் தாய் 'ஒரு பேரீத்தம் பழம்' என்று பதில் சொன்னார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதுவர் 'நீ இப்படி அவனை அழைத்து அவனுக்கு எதுவும் கொடுக்காது விட்டிருந்தால் ஒரு பொய் சொன்னதற்கான கூலி கிடைத்திருக்கும்' என்று விளக்கினார்கள்.
நாம் அடிக்கடி சில சங்கடங்களை தவிர்க்கவும் சமாளிக்கவும் நம்மை அறியாமலேயே இப்படி பெரும்பாலும் பேசி விடுகிறோம். அதன் பாரதூரங்களை நாம் உணர்வது கூட இல்லை. ஆனால் அவை நமது பிள்ளைகள் விடயத்ததில் அவர்களின் நடத்தைப் பண்புகளில் கண்டிப்பாக பாதிப்புகளை உண்டுபன்னுகிறது என்பதை நாம் புரிந்து கொள்வதுடன் அதற்காக நமக்கு கிடைக்கும் பாவக்கணக்கிற்காக நாம் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடியாக வேண்டியுள்ளது என்பதனை நினைவில் கொள்வோம்.
திரும்வவும் பேசலாம்...
துணை நூல்:
1. 'அல் இன்ஸாதுல் இன்இகாஸி' – முஹம்மத் றாஷித் திமாஸ், தார் இப்னு ஹஸ்ம் பதிப்பகம்,
2. இணைய தள கட்டுரைகள்.
No comments:
Post a Comment