துர்ரன் தளீர்
ஓவியர் இக்லாஸை தூரத்தில் இருந்தே நான் அடையாளம் கண்டு கொண்டேன். விகாரமகாதேவி பூங்கா நடைபாதை வழியே அவர் நடந்து சென்றுகொண்டிருந்தார். எனது பைக்கை ஓரமாக்கி வீதி அருகில் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு திரும்பி வருகையில் பணம் தருவாக பார்க்கின் வசூல் செய்யும் நகர சபை ஊழியருக்கு சைகை செய்துவிட்டு விரைந்து ஓடி இக்லாஸ் அருகில் சென்று அவருக்கு ஸலாம் கூறினேன். என்னைப் பார்த்த அதிர்ச்சியில் மிகுந்த ஆர்வத்துடன் என்னைக் கட்டியணைத்துக் கொண்டார்.
'என்ன இந்த பக்கம், வோக்கிங் வந்தீங்களா?' எனக் கேட்டார் இக்லாஸ்.
'வேலை முடிந்து வீட்டுக்குப் போயிட்டிருந்தன். அப்பதான் உங்களைப் பார்த்தேன். உடனே வந்துட்டன்...' என்றேன்.
ஓஹ் குட்..குட்... கம் லெட்ஸ் வோக்.... என திரும்பி நடக்க ஆரம்பிக்க ஆரம்பித்தவருடன் நானும் கூட சேர்ந்து நடக்க ஆரம்பித்தேன்.
'மகன் எப்பிடி இருக்காரு... ஏதும் மாற்றம் இருக்கா.. என விசாரித்தார்.
'அப்படியேதான் இருக்கார். மத்தப்படி ஓகே!' என்றேன்.
பூங்கா நடைபாதை வளைவில் வெறுமையாக இருந்த சீமெந்து பெஞ்சில் போய் உட்கார்ந்தார். நானும் அருகில் அமர்ந்து கொண்டேன். தாடி வளர்ந்திருந்தது. இரண்டு வாரமாவது இருக்கும் சவரம் செய்து. என்னைப் போலவே அவருக்கும் அதிகம் இளநரை இருந்தது. கட்டம் போட்ட நீல சேட்டும் ட்ரவுசரும் அணிந்திருந்தார். வி கே சி செப்பல் அணிந்திருந்தார். காலுக்கு மேல் கால் போட்டவராக இடது கையை பெஞ்சில் நீட்டிவைத்தவாறு என்பக்கம் திரும்பிப் பேசினார்.
'இங்க லைப்ரரில ஒரு எக்சிபிசன். பெயின்டிங்ஸ். பாக்கலாம்னு வந்தேன். அப்பிடியே ஒரு ரவுன்ட் பார்க்ல நடக்க யோசனை வந்திச்சி, அதான் நடந்துக்கிட்டு வந்தன்.' என்றார்.
'புதிசா ஏதும் வரஞ்சிருக்கிறீங்களா?' என நான் கேட்டேன்.
அப்படியே முன்னே வெறித்துப்பார்தவாறு சிந்தனையில் மூழ்கிப்போனார். ஒரே அமைதி. அவராக ஏதும் சொல்லும் வரை நானும் காத்திருந்தேன். அப்படியே இயல்பாக என்பார்வை பூங்காவை சுற்றியது. காதல் ஜோடிகள் ஒன்று ஆலிங்கனதுடன் வெளியுலகம் பற்றி சிரத்தையற்று ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு இருந்தது. தூரத்தே குழந்தையை நடக்கவிட்டு ஒரு முஸ்லிம் பெண் பின்னால் சூதானமாக சென்றுகொண்டிருந்தார்;. அவள் பின்னே அவளது கணவன் பேபி ட்ரொலியை தள்ளியவாறு சென்று கொண்டிருந்தார். ஒரு மரத்தின் அடியில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் ஆயாசமாக நிலத்தில் விரிப்பை விரித்துப் படுத்தவாறு நூல் படித்துக்கொண்டிருந்தாள். எங்கள் பின்னால் இருந்த நடைபாதையில் பன்னிரெண்டு பதிமூனு வயது மதிக்கத்தக்க ஆண் பிள்ளைகள் சைக்கிள் மிதித்;தவாறு எங்களைக் கடந்து சென்றனர்.
இக்லாஸ் எனக்கு சென்ற ஆண்டுதான் அறிமுகமானார். சரியாக சொல்வதானால் ஜூலை மாதம். என் மகன் சுகவீனமுற்று பொரளை லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் 9ம் வாட்டில் அனுமதிக்கப்பட்ருந்த போதுதான் அவரை நான் அங்கு கண்டேன். பெரிதாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஒரு அறிமுகத்துக்காக இலோசான புன்னகையுடன் தலையை அசைத்தார். பதிலுக்கு நானும் புன்னகைத்தேன். அவரது பிள்ளையும் எனது மகனும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். நானும் அவரும் தீவிர சிகிச்சைப் பிரிவின் கதவிலிருக்கும் கண்ணாடியூடாக எங்களது பிள்ளைகளை பார்த்துக் கொண்டிருந்தோம். இக்லாஸின் மனைவி அவரிடம் வந்து வீட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்களை கொடுத்துவிட்டு அவரிடம் இருந்த பையை பெற்று திறந்து பார்த்தவாறு இருந்தாள். அவள் இளவயதாக இருந்தாள். மெலிந்த அளவான அழகான தோற்றம். துருவென்ற சுறு சுறுப்பு. மீண்டும் உள்ளே சென்ற அவள் எனது மனைவி அருகில் சென்றாள். எனது மனைவி கதிரையில் இருந்தவாறு தலையை கட்டிலில் வைத்து உறங்கிக் கொண்டிருந்தாள். இக்லாஸின் மனைவி எனது மனைவியை உசுப்பி எழுப்பிவிட்டாள். தன்னை மறந்து தூங்கியிருந்த என் மனைவி திடீரென தூக்கம் கலைந்த அதிர்சியில் இருந்து நிதாமடைய சில விநாடிகள் சென்றது. கதிரையில் இருந்தவாறு கண்ணாடி வழியாக என்னை பார்க்க முயற்சித்தாள். அப்படியே மெதுவாக எழுந்து முகத்தை துடைத்துக் கொண்டாள். தலையில் துண்டை சரிசெய்தவாறு நடந்து என்னை நோக்கி வந்தாள். கதவைத் திறந்து வெளியே வந்த போது குளிர்ந்த ஏசிக் காற்று என்னில் பட்டு ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.
கதவுக்கு எதிரே எனது மகனின் கட்டில் இருந்தது. காலில் ஒட்சிசன் மீட்டர் கிளிப் செய்திருந்தார்கள். நெஞ்சில் ஈசிஜி வயர்கள் பொருத்தப்பட்டிருந்தது. ஒட்சிசன் வழங்கியிருந்தார்கள். அந்த முகமூடி எனது மகனின் முகத்தை மறைத்தது. இரண்டு மூன்று நாட்களாகிவிட்டது. கோமா நிலைக்கு சென்று விட்டதாக வைத்தியர்கள் சொல்லியிருந்தார்கள். நான்கு நாட்களுக்கு முன்னால் என்னை காய்ச்சல் நூறு டிகிரியில் வாட்டியெடுத்தது. அது அப்படியே என் மகனுக்கு தொற்றிவிட்டது. இரண்டுநாட்களாக பிள்ளை கண் திறக்கவேயில்லை. இதற்குமேல் வைத்திருப்பது சரியில்லை என்று வைத்தியசாலைக்கு கொண்டுவந்திருந்தோம். ஏற்கனவே பியூமரேஸ் டெபிசன்சி என்ற நோயினால் படுத்தபடுக்கையாக இருக்கும் எனது மகனை இந்தக் காய்ச்சல் கடுமையாக தாக்கிவிட்டது. இனிமேல் ஐம்பது சதவீதமே பிழைப்பதற்கு வாய்ப்பிருப்பதாக சொல்லிவிட்டார்கள்.
எனது மனைவிக்கு கொடுக்கக் கொண்டுபோயிருந்த இரவு உணவையும் மாலை நேர டீ யையும் அவளிடம் நீட்டினேன். எதிலும் பிடிப்பில்லாதவளாக தன் கால்களைக் காட்டினாள். கணுக்காள்கள் இரண்டும் வீங்கியிருந்தது.
அல்சர் குளிச வாங்கினயா? என்றாள்.
சட்டைப் பையிலிருந்து குளிசையை எடுத்து அவளிடம் நீட்டினேன். அந்நேரம் இக்லாஸின் மனைவியும் வெளியில் வந்து அவருக்கு அருகில் நின்று பேச ஆரம்பித்தாள்.
'அவகுட பிள்ளைக்கு என்ன? என நான் கேட்டேன்.
'புறந்த நாளையில இருந்து அதுக்கு வருத்தம் தானாம். புரோடின் குறையிறயாம்.' என்றாள்.
அப்பிடி என்டா' என நான் கேட்டேன்.
'நான் என்ன டொக்டரா' என என்னிடம் சலித்துக்கொண்டாள். 'இன்டக்கி நோன்பு அவள், பாவம் நல்ல புள்ள, முதல் புள்ளயாம், ஒரு சாதியா துரு துருவென்டு சலப்பிக்கிட்டே இருப்பாள்' என்று கூறினாள்.
'ஏதும் சொன்னானுகளா? என்றவாறு கதவருகில் சென்று கண்ணாடிவழியாக எனது பிள்ளையைப் பார்த்தவாறு கேட்டேன்.
நிராசையுடன் இல்லை என்றவாறு தலையை மட்டும் ஆட்டினாள். பொருட்களை வைத்துவிட்டு வருவதாக சொல்லி உள்ளே சென்றாள்.
அப்போதுதான் இக்லாஸ§ம் நானும் மறுபடி சிரித்துக் கொண்டோம். வைத்தியசாலையில் சந்திக்க ஆரம்பித்து சில நாட்களில் எங்களுக்குள் சற்;று நெருக்கம் கூடியிருந்தது. வெள்ளிக்கிழமை நாளொன்றில் ஜ§ம்ஆவுக்கு சென்று திரும்பிவரும் போது இருவரும் வைத்தியசாலை கென்டீனில் சாப்பிட்டோம். அப்போதுதான் அவர் என் தொழிலைப் பற்றி விசாரித்தார். அவர் பத்திரிகை ஒன்றில் ஓவியராக பணி புரிவதாக தெரிவித்தார்.
அந்த அறிமுகத்தின் பின்னர் வைத்தியசாலையில் இருந்து பிள்ளை குணமடைந்து வீடு வந்த பின்னரும் அவரும் நானும் அடிக்கடி வெள்ளிக்கிழமைகளில் பள்ளியில் தொழுகையில் சந்தித்துப் பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டோம். பகல் உணவை ஒன்றாக உண்பது எங்களுக்குள் வழக்கமாகியிருந்தது. ஓவியம் வரைவது பற்றி நான் அவரிடம் அடிக்கடி வினவுவேன்.
'மோனாலிசா, இறுதி இராப்போஷணம் மாதிரி சீரியஸா நீங்க வரைய மாட்டீங்களா? என நான் கேட்டேன்.
'பத்திரிகைகளுக்கு அந்த மாதிரி ஓவியங்கள் தேவையில்லை. பிரசுரிக்க வேண்டிய கதைகளுக்கு பொருத்தமான படங்களை வரைவது எனது வேலை. நீங்க சொல்றது சீரியஸ் வேக்ஸ். அதுக்கு எங்குட ஒபிஸ்ல வேலை இல்ல. ஆனா என் மனத்திருப்திக்கு அது மாதிரி சீரியஸா வரைவதுண்டு. அப்பிடி வரைந்தவைகளை என் வீட்டில் வைத்திருக்கிறேன்' என்றார் இக்லாஸ்.
'ஓவியம் ஒரு தூண்டுதல், விரகதாபத்தில் இருப்பவருக்கு காமம் வெளிவர துடிப்பது போலத்தான் ஓவிய கருவும். அப்படி ஒரு தூண்டல் வரும்போது அதை வரைந்து முடிக்கும் வரை அது அடங்காது, காமம் உச்சத்தை அடைவது போல' என்று தொடர்ந்தும் கூறினார் இக்லாஸ்.
நோன்புப் பெருநாளைக்கு ஊருக்கு சென்றதிலிருந்து இருவரும் ஒன்றாக சந்தித்துப் பேசிக் கொள்ளவேயில்லை. லீவு முடிந்து ஊரிலிருந்து திரும்பி வந்த பின்னரும் அவரை சந்திக்க கிடைக்கவில்லை. ஹஜ்ஜ§ப் பொருநாளும் முடிந்து இன்றுதான் அவரை நீண்ட நாட்களின் பின் அவரைச் சந்தித்திருக்கிறேன். அவரிடம் பேசுவதற்கு நிறையவே இருந்தது.
தன் மௌனத்தை கலைத்த இக்லாஸ் திரும்பி என்னைப் பார்த்தவாறு தன் கண்கள் ஒளிர புருவங்களை உயர்த்தி 'இப்ப ஒரு ஓவியம் வரஞ்சிக்கிட்டு இருக்கேன். உங்களுக்கும் அதில பங்கிருக்கு மிராஸ்;' என்றார் இக்லாஸ்
.
'எனக்கா!? என்றேன்.
'அந்த கென்செப்ட் உங்குளுக்குப் புரியும். மனிதர்கள் எத்தகைய துக்கத்தையும் கடந்து போய்விடுகிறார்கள். எவ்வளவு பெரிய துன்பமான நிகழ்வுகளிலும் சிறு சிறு சந்தோசங்களை தேடிக்கொள்கிறாhர்கள். அந்த சந்தோசம்தான் அந்த துன்பத்தை அவர்கள் கடந்து போக வழி செய்கிறது. அது காரிருளில் தெரியும் ஒரு துளி வெளிச்சம். அதன் வழியாகத்தான் மக்கள் துன்பத்தை தாண்டிவருகிறார்கள்' என்றார் இக்லாஸ்.
'இதில் நான் எங்கு சம்பந்தப்படுகிறேன்' என்றேன் நான்.
'நம்முட மனுசிமாருதான் உதாரணம். பிள்ளைகள் பிழைக்கிறதே நம்பிக்கை இல்லாம இருந்தப்ப இதுகள் வாட்டுக்குள்ளயே சிரிச்சிப் பேசி ஜோக் அடிச்சி, சிரிச்சி சிரிச்சி செத்தாளுகளாம். உங்குட வைபும் சொல்லி இருப்பாவே' என்று அவர் கூற..
'ம்... துர்ரன் தளீர்' என்றேன் நான்.
அவரும் 'துர்ரன் தளீர்' என்றார் கோரசாக. இருவரும் பலமாக சிரித்துக்கொண்டோம்.
சிரிப்பை நிறுத்திய இக்லாஸ் 'பாருங்க இப்ப சொன்னாலும் நமக்கே சிரிப்பு வருது. இதுதான் என்னை ஓவியம் வரைய தூண்டியது. துர்ரன் தளீர் என்பது ஒருத்தியோட பெயர்தான். இருந்தாலும் அது நமக்கு ஒரு சஞ்சீவி மாதிரி. ஒரு துருவ நட்சத்திரம்... நம்பிக்கை.. வாழ்வில் ஒரு பிடிப்பு... நிராசையாக கிடந்த இந்த பொம்புளைகள அந்தப் பெயர்தான் தங்கள் கவலை மறந்து சிரிக்கவைத்தது. இதை மையமா வச்சுத்தான் இந்த ஓவியத்தை நான் வரஞ்சிட்டு இருக்கன்' என்றார் இக்லாஸ்.
'இப்ப எந்த மட்டுல இருக்குது ஓவியம்' என்றேன் நான்.
'இப்பெல்லாம் எங்குட வீட்டு சின்னஞ் சிறிசுகள் கூட என்ன பகிடி பன்னுதுகள் மிராஸ். நான் ஏதோ துர்ரன் தளீர் என்கிற பெயருக்கு வசியம் ஆகிட்டதா நினைக்குதுகள்...' என்றார் இக்லாஸ்.
இதைக் கேட்டு நானும் சிரிக்க அவரும் பலமாக சிரிக்க ஆரம்பித்தார். அப்படியே எழுந்தவாறு,
'எனக்கு லேட் ஆகுது மிராஸ். வார கிழம ஜ§ம்ஆவுல சந்திப்பம் என்றார்.
இருவரும் விடைபெற்றுக் கொண்டு பிரிந்தோம். நான் அப்படிவே பைக் வைத்திருக்கும் இடத்துக்கு வந்து வீட்டுக்கு புறப்பட்டேன். துர்ரன் தளீர் என் நினைவுகளை வருட ஆரம்பித்தது.
ஒன்பதாம் வாட்டிலிருந்து எனது மகனை இரண்டாம் வாட்டுக்கு மாற்றியிருந்தார்கள். எனது மகனின் நிலையில் முன்னேற்றம் இருக்கவில்லை. நினைவு திரும்பவேயில்லை. பெலியாடிக்; கெயர் என்ற கோமா நோயாளிகளை பராமரிக்கும் முறையை சொல்லித்தந்தார்கள். இதற்கு மேல் அவர்களால் செய்வதற்கு எதுவுமில்லை. என்னையும் என் மனைவியையும் அழைத்து ஆற்றுப்படுத்துமாறு சீனியர் டொக்டர் ஜ§னியர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். எங்கள் மதத்தைச் சேர்ந்த மௌலவிமார்கள் யாரையும் அழைத்து வந்து ஏதும் பிரார்த்தனைகள் செய்ய வேண்டுமா எனவும் கேட்டார்கள். கடைசியாக என்னதான் சொல்ல வருகிறீர்கள் என்று பிடிவாதமாக கேட்டோம். ஒன்றில் பிள்ளை இப்படியே கண் திறக்காது இருந்து மரணிக்கும் அல்லது தொடர்ந்து கோமாவிலேயே இருக்கும் என்று பதில் தந்தார்கள். எனக்கு அழுவதற்குக் கூட தெம்பிருக்கவில்லை. மனைவி அழுது கொண்டிருந்தாள். பிள்ளையை இனிமேல் வீட்டில் வைத்து பராமரிக்குமாறு எங்களைக் கேட்டுக் கொண்டார்கள்.
ஆறாவது அல்லது ஏழாவது நாளில் இக்லாஸின் பிள்ளை பற்றி எனது மனைவியிடம் விசாரித்தேன். வாட்டு மாற்றியதில் இருந்து அவரை சந்திக்கவில்லை.
'அந்தப் புள்ள சரியான ஜோக்... கொழும்புல அவகுட சொந்தக் கார சாச்சி ஒருத்தர் இருக்காவாம் அவட பேருதான்...துர்...ஹா..ஹா.. ஹாhh என சிரித்துச் சிரித்துச் சொன்னாள்.
துர்ரன் தளீர் என்ற பெயரை அவளால் எப்போதும் சரியாக சொல்லவே முடியவில்லை.
'எப்பிடியென்டு தெரியுமா... அத ஒரு மாதிரியா...தளீர் என்று இழுத்து கூப்புடுவாங்களாம்... வாட்டுக்க வச்சி அவள் இதச் சொன்னா நாங்க சிரிச்சி சிரிச்சி சாகிறதான்... நேர்ஸ்மாரெல்லம் வந்து ஒரு மாதிரியா பாப்பாளுகள்! ஹா...ஹா..' என்று சிரித்துச் சிரித்து நினைவை மீட்டிக்கொள்வாள். இன்றும் அந்தப் பெயரை வைத்து எங்கள் வீட்டு சின்னஞ் சிறிசுகள் கூட என்னையும் பகிடி செய்கிறார்கள். அந்தப் பெயரை சொல்லும் போது எனக்குள்ளும் ஒரு சிரிப்பு துளிர்விடுகிறது. உதட்டை குவித்து அந்த சிரிப்பை மெலிதாக அடக்கவும் செய்கின்றேன்.
இக்லாஸ் வரையும் ஓவியத்தில் அவர் துர்ரன் தளீரை எப்படி வரைவார். என்ற சிந்தனை என்னில் கிளைகொண்டது. துர்ரன் தளீரை நானோ அவரோ கண்டதில்லை. துர்ரன் தளீரை இப்போது என்மனதில் ஓவியமாக தீட்ட அரம்பித்திருந்தேன். நீண்ட வெண்மையான அடர்த்தியான சிறகுகளைக் கொண்ட அவள் தன் சிறகுளை வளைத்து அரவணைக்குகையில் இருண்டு கிடக்கும் உள்ளச் சிடுக்குகளில் இருந்து கவலைகள் மெல்ல மெல்ல கசிந்து படிய ஆரம்பிக்கிறது. மரணங்களை ஏந்திய பெண்களும் அந்த அரவணைப்பில் புன்னகைத்து அலவலாவுவர். அவர்களது புன்னகைகளில் இருந்து எழும்பும் ஒலி துர்ரன் தளிராக எமக்குள் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.
முற்றும்
01.07.2024
விடிவெள்ளி பத்திரிகையில் பிரசுரமானது . 04.07.2024
https://epaper.vidivelli.lk/newspaper/Weekly/vidivelli/2024-07-04#page-10