அருளப்படாத ஸுஹுபுகள்!
எழுத்தாணிகள் பதியாத ஹர்புகள்!
பாராயணம் செய்யப்படாத ஆயத்துக்கள்!
1. ஓ மக்களே! பசுமையான வாழைமரங்களில் ஏறாதீர்கள். வாழைமரங்கள் பலமானவை என்று நீங்கள் நம்பிக்கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களும் அப்படித்தான் நம்பிக்கொண்டிருந்தார்கள். ‘நாம் எம் மூதாதையர்கள் வழிகளில் நிற்கின்றோம்’என்று அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் பிடிவாதக்காரர்கள். அவர்கள் சத்தியத்தை பார்கக் கூடாது என்பதற்காக தம் முகங்களை புற முதுகு தெரியும் வரை திருப்பிக் கொள்கிறார்கள். அவர்கள் சிந்திக்கவே மாட்டார்கள். சிந்திக்காத சமூகத்தார்களுக்கு அநியாயக்கார்களை நாம் பரிசாக சாட்டிவிடுவோம்.
2. அடி அறுக்கப்படும் வாழைமரங்களில் மக்களை ஏற்றுபவர்கள் பெரும் அநியாயக்காரர்கள். அவர்கள் மக்களை தம் கந்தர்வக்குரல்களாலும் எழில் கொஞ்சும் தோற்றத்தாலும் அநியாயமாக ஏமாற்றுகிறார்கள். நாம் அநியாயத்தை எமது நியதிகளில் ஒன்றாக ஆக்கிக் கொள்ளவில்லை. மக்களை வாழை மரங்களில் ஏற்றி அடியில் வெட்டிவிடுபவர்கள் சாபத்துக்குள்ளானவர்கள். அவர்களது இதயங்கள் கல்லாகிவிட்டன. நிச்சமயாக அவர்களது உள்ளங்கள் கல்லாகித்தான் போய்விட்டன.
3. திருவுளமாகுபவரே! நீர் உம் மக்களைப் பார்த்து கேட்பீராக! இன்னும், மூதாதையர்கள் செய்தவை பித்அத்துகள் என்று மல்லுக்கு நிற்பவர்களை பார்த்து நீர் கேட்பீராக! மக்களை பகட்டாகவும் கபடமாகவும் ஏமாற்றி அவர்களை வாழை மரங்களில் ஏற்றுபவர்களை நீங்கள் ஏன் தோலுரிப்பதில்லை?
4. திருவுளமாகுபவரே! வாகாக அனைத்தையும் மறந்துவிடும் இந்த கூட்டத்தாரிடம் நீங்கள் கூறுவீராக. ஓ மக்களே! முன்னரும் அவர்கள் உங்களை வாழைமரங்களில் ஏற்றி அடியை வெட்டினார்கள். அவர்கள் வெட்டியது வாழைமரங்களை அல்ல. உங்களது புத்தியை! அதனால் நீங்கள் கண்ணிருந்தும் பார்க்க மாட்டீர்கள். காதிருந்தும் கேட்கமாட்டீர்கள். வாயிருந்தும் கேள்வி கேட்கமாட்டீர்கள். மூளையிருந்தும் சிந்திக்க மாட்டீர்கள். இன்னமும் நீங்கள் சிந்திக்க மாட்டீர்கள்.
5. மக்களை வாழைமரங்களில் ஏற்றிப்பிழைக்கும் இந்த அநியாயக்காரர்களை பற்றி நீங்கள் பகுத்தறியக்கூடாதா? அவர்கள் எப்போதும் காணல் நீரையே உங்களுக்கு வாக்களிக்கிறார்கள். காணல் நீரின் பின்னால் ஒடுபவர்களது தாகம் என்றும் தீர்வதில்லை. இருந்தும் அவர்கள் அதனை நம்பி அதன் பின்னால் ஓடிக்கொண்டே இருப்பார்கள்.
6. மக்களை வாழை மரத்தில் ஏற்றுவதற்காக இவர்கள் தங்கள் கழுத்துக்களில் பொய்களாலும் புரட்டுக்களாலும் ஆன திராட்சை குலைகளை சுமந்து வருகின்றார்கள். அந்த திராட்சைகள் பார்ப்பவர்கள் கண்களை நிச்சமாக மயக்கிவிடுகின்றன. பலஹீமான உள்ளம் கொண்டவர்கள் அதை ஈமான் கொண்டு விசுவாசித்து விடுகிறார்கள்.
7. இந்த கபடதாரிகள் மக்களை கூட்டமாக திரட்டி அவர்களை வாழை மரங்களில் ஏற்றி அவர்களது வாய்களில் இந்த திராட்சைகளை வைத்துவிடுகிறார்கள். புளிப்பும், இனிப்பும் கொண்ட திராடட்சைகளை உண்பவர்கள் அதன் சுவையில் மயங்கிவிடுகிறார்கள். இவர்கள் சூனியக்காரர்களுக்கு ஒப்பானவர்கள். பின்னரும், அந்த திராட்சைகளை உண்பவர்கள் சிந்திக்க மாட்டார்கள். அவர்களது சிந்தனைகள் மழுங்கடிக்கப்பட்டுவிட்டது. நீங்கள் சிந்திக்க வேண்டாமா? நிச்சமயாக சிந்திக்காதவர்களை ஷைத்தான் இலகுவாக ஏமாற்றிவிடுகிறான்.
8. திருவுளமாகுபவரே! நீர் உம் மக்களைப் பார்த்து சொல்வீராக! மக்களை வாழைமரங்களில் ஏற்றிப்பிழைக்கும் இந்த அநியாயக்காரர்களைக் கண்டு வியக்காதீர்கள். நிச்சயமாக! எதையும் பார்த்ததும் வியப்பவன் தன்னை அதன் முன் ஒப்புவித்துவிடுகிறான். பின்னரும் நீங்கள் அவர்கள் சொல்வதை (எமது) வேதவாக்குகள் போல் விசுவாசித்து பின்பற்ற ஆரம்பித்து விடுவீர்கள். அவர்களது பாவங்களில் நீங்களும் பங்காளர்களாக வேண்டாம்.
9. ஓ மக்களே! மக்களை வாழைமரங்களில் ஏற்றிப்பிழைக்கும் இந்த அநியாயக்காரர்களுக்காக நீங்கள் பரஸ்பரம் அநியாயம் செய்து, பரஸ்பரம் உங்கள் இரத்தங்களை ஓட்டாதீர்கள். அநியாயம் செய்வதும் இரத்தத்தை ஓட்டுவதும் எமது நியதிகளில் ஒன்றல்ல. நிஜங்களை விற்று நீங்கள் பொய்யை வாங்குவீர்களா? இல்லை. சிந்திப்பவர்கள் சொல்வார்கள் ‘இந்த எமாற்றுப் பேர்வழிகள் எதனைச் சொன்னாலும் நாம் உடனே நம்பிவிடமாட்டோம்.’
10. மக்களை வாழைமரங்களில் ஏற்றிப்பிழைப்பவர்களைப் பற்றி உமக்கு என்ன தெரியும்? நிச்சயமாக அவர்கள் இறைவனின் சோதனையாகும். அவர்கள் விடயத்தில் (விசுவாசிக்கும் விடயத்தில்) நீங்கள் அத்துமீறிவிட வேண்டாம். அவர்களது உள்ளங்களில் கருமை படர்ந்துள்ளது. கண்களில் பொய்கள் ஜொலிக்கிறது. அவர்கள் சொல்வதை விசுவாசித்து பூமியில் அநியாங்களை கட்டவிழ்த்துத் திரிய வேண்டாம். அநியாயக் காரர்கள் அநியாயம் இழைக்கப்படுபவர்களது சாபங்களை பயந்து கொள்ளட்டும். அவர்களது பிரார்த்தனைக்கும் இறைவனுக்கும் இடையில் திரைகள் கிடையாது.
11. சிந்திப்பீராக! மக்களை வாழைமரங்களில் ஏற்றிப்பிழைப்பவர்கள் தமக்குள் மோசமான வார்த்தைகளை கூறி ஏசிக்கொள்வதை நீர் பார்த்ததில்லையா? அவர்கள் தங்களுக்குள் பகலில் சண்டையிட்டும், தூசித்தும் கொள்வார்கள். மக்கள் இவர்கள் எமக்காகவே அதனை செய்கின்றனர் என எண்ணிக்கொள்ள வேண்டும் என்பதற்காக. பின்னரும் சூரியன் மேற்கில் மறைந்து இருள் கவியும் பொழுதுகளில் அவர்கள் தங்கள் மறைவிடங்களில் சந்தித்துக் கொள்கின்றனர். மீண்டும் சூரியன் உதிக்கும் வரை அவர்கள் கூடிப் பேசி மகிழ்கின்றனர்.
12. அறிந்துகொள்வீராக! வெளியில் விரேதமாகவும் உள்ரங்கத்தில் கூலாவியும் திரியும் இவர்கள் எப்போதும் விரோதிகள் அல்லா். மக்கள் சுயமாக சிந்தித்துவிடக்கூடாது என்பதற்காகவே அவர்கள் இவ்வாறு செய்கின்றார்கள். அவர்கள் நிரந்தர எதிகரிகளுமில்லை நண்பர்களுமில்லை. மாறாக பாவிகள்.
13. அன்றியும் இவர்களை சிலாகித்தும் பாராட்டியும் திரியும் அடிவருடிகளையும் நீங்கள் காண்பீர்கள். அவர்களும் இறைவனிடத்தில் பாவிகளே!
முற்றும்.
06.22.2024