“தேசப்பற்றும் ஈமானில் ஒரு பகுதி.” இஸ்லாம் கற்றும் தரும் மிக முக்கிய படங்களில் ஒன்று. அது இன, மத, சமூக, பொருளாதார பிரிப்புகளுக்கு அப்பால் அனைவரையும் தேசம் என்ற மையப்புள்ளியுடன் இணைக்கின்றது. இஸ்லாம் ஒரு படி மேல் நின்று அதற்கு ஒரு ஆன்மீக வடிவம் கொடுக்கின்றது. இதன் மூலம் முஸ்லிம்களிடையே தேசப்பற்று என்பது ஒரு மார்க்கக் கடமையாகிறது. ஈமானில் ஒரு பகுதியாகின்றது. சமகாலத்தில் எம்மில் பெரும்பாலானவர்களிடத்தில் தேசப்பற்றுணர்வு மிகக்குறைவு. இல்லெயென்று என்று கூடச் சொல்ல முடியும். கிரிகட் விளையாட்டு என்று வரும் போது நாம் தீவிர ஆதரவு காட்டுவதனை தேசப்பற்று பற்று என்ற வரையரைக்குள் முற்றுமுழுதாக கொண்டு வருவது தவறாகும். தேசப்பற்று என்ற உணர்வுநிலைப்பட்ட ஒரு வார்த்தை நாட்டின் ஒவ்வொரு பிரஜையிடமும் வேண்டிநிற்பதுவும் அதுவல்ல. விளையாட்டு ஒன்றுடன் எமக்குள்ள ஆர்வம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்தது. அது தற்சமயம் தேசநிலைப்பட்டு நிற்பதற்கும் தேசப்பற்றுடன் சேர்த்து நோக்கப்படுவதற்கும் சர்வதேச அரங்கில் எம் தாய் நாட்டின் பெயரை கொண்டு சென்று நிலை நிறுத்தி அசைக்க முடியாத ஒரு இடத்தில் வைத்திருப்பதற்கு விளையாட்டு பிரதான காரணமாகிவிட்டதே மிக முக்கிய காரணமாகும். இதனை நாம் தவறு என்று சொல்லமுடியாது. அந்த அளவிலாவது தேசம் என்ற மையப்புள்ளிக்கு அனைவரும் இணைவது முக்கியமானதாகும். நாம் இங்கு இது பற்றிய வாதவிவாதத்திற்கு வரவில்லை. எமது மனட்சாட்சிப்படியும், வெளிப்படையான யதார்த்த நிகழ்வுகளின் படியும் எம்மிடம் தாய்நாடு, நம் நாடு, என் தேசம், நம் தேசம் என்ற உணர்வு நிலை ஒப்பீட்டளவில் பெரும்பாண்மை சமூகங்களை விட குறைவு. தேசப்பற்று எந்த சமூகத்திடம் விகிதாசார அளவில் அதகளவு யாரிடம் காணப்படுகிறது என்பதற்கு அப்பால் நாம் ஒரு முக்கிய மார்க்க கடமையை தவறவிடுகின்றோம் என்று நிலைப்பாட்டில் ஒத்துழைப்பது நாம் சொல்ல வரும் விடயத்தினை நோக்கி அனைவரையும் நெருங்கக் கொண்டுவரும்.
அடிப்படையில் அடுத்த குறிப்பாக பெரும்பாண்மை இனத்து சகோதரர்களிடம் நாம் ‘வந்தேறு குடிகள்’ என்ற கருத்து நிலைப்பாடு காணப்படுகிறது என்பதில் சந்தேகமில்லை. இந்த நிலைப்பாடே அவர்கள் எம்மை நிருவாக ரீதியாகவும், பௌதீக வள ஒதுக்கீடுகளிலும், அரசியல் பொருளாதாரம் போன்ற இன்னோரன்ன அம்சங்களில் நாட்டின் பிரஜை என்ற அவளவில் கூட நோக்க தவறுகின்றனர். அவர்களின் நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையில் எம்மில் பலரது செயற்பாடுகள் அமைந்து விடுகிறது. பெரும் குற்றச் செயல்களில் பேதமின்றி அனைத்து சமூகங்களை சார்ந்த தனிநபர்கள் ஈடுபட்டாலும் எமது சகோதரர்கள் என்று வரும் போது அது மிகவும் வெளிப்படையாக பிரஸ்தாபிக்கப்படுகிறது. இந்த மாதிரியான நிலைகளில் அவை வேண்டுமென்ற சதி என்று பேச்சளவில் நிறுத்திக் கொள்கின்றோம். அதற்கு மேல் சிந்திப்பதற்கும் இவ்வாறான நிலைப்பாட்டுக்கான அடிப்படை காரணத்தை அறியவும் தவறிவிடுகின்றோம். இந்த தவறான உணர்வு நiலைப்பாட்டினை ஏனைய சமூகங்களிடம் இருந்து மாற்றுவதற்கு நாம் நடவடிக்கை எடுப்பதில்லை.
முதலில் நாம் தேச உணர்வு நம்மில் வளர்க்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் ஒன்று பட வேண்டும். இந்தக் கருத்து நிலையில் இருந்து கொண்டு நாம் எம் தலைப்புக்கு வருகின்றோம். கல்வி நடவடிக்கை என்று சொல்லும் போது இடை நடுவில் இருந்து இக்கருத்தினை விதைப்பதை விட பாலர் கல்வியில் இருந்து ஆரம்பிப்பது மாறுபட்ட கருத்தாங்களால் பாதிப்புக்குள்ளாகாத உள்ளத்தில் தேச சிந்தனையை விதைப்பது தேசத்தின் மீதுள்ள பற்று அவர்களின் வயதுடன் இணைந்து வளரவும் தேசப்பற்றுமிக்க இஸ்லாம் விரும்பும் பிரஜைகளாக அவர்கள் மாறுவதற்கும் அது வழிகோலும். ஏனைய சமூகங்களை விட எம் சமூக அங்கத்தவர்களாகிய நம்மில் எத்தனை பேருக்கு தேசிய கீதம் ஞாபகத்தில் இருக்கிறது என்பது எம் மனட்சாட்சியைத் தொட்டுப் பார்த்தால் தெரியும். எமது முஸ்லிம் பாடசாலைகளில் ஏதாவது நிகழ்வுகளுடன் மட்டும் மனப்பாடமிட்டு மேடைகளில் ஒப்புவிப்பதுடன் தேசிய கீதம் எம் சிந்தைகளை விட்டு அகன்று விடுகின்றது. தேச உணர்வு எம்மில் மிகைத்து காணப்படுவது நாம் இந்த தாய்நாட்டின் பிரஜை என்ற வகையில் அதற்கு செய்ய வேண்டிய கடமை எவ்வளோ இருக்கிறது என்ற உணர்விணை எம்மில் தினமும் தந்து கொண்டிருக்கும். நாம்
ஒரு சிறு கற்பணைக்குச் செல்வோம். ஒரு தேசப்பற்று மிக்க குடிமகன். அவனது சூழல் சார்ந்த செயற்பாடுகள் அவனது சுயநலத்துக்கும் தனிப்பட்ட பொருளாதார இலாபங்களுக்கும் அப்பால் நாடு, சூழல், எதிர்காலச் சந்ததி என்ற பொது நிலையான மிகவும் ஆரோக்கியமான ஆன்மீகம் நிறைந்த சிந்தனை அவனை ஆட்கொண்டிருக்கும். அவனிடம் இருந்து எப்போதும் நல்லதையே நாம் எதிர்பார்க்க முடியும். அவன் ஒரு ஆசிரியனாக இருந்தால் இந்த நாடு வளமுடன் மிளிர எவ்வகையான பிரஜைகள் உருவாக வேண்டும் என்ற எண்ணம் அவனிடம் மிகைத்து இருக்கும். அவனது பங்குக்கு அவனால் அப்படிப்பட்ட பிரஜைகளை பயிற்றுவிக்க அது உதவும். இது ஒரு மிகப்பெரிய தஃவாவாகும். ஓவ்வொருவரும் தனது ஆளுமைக்குட்பட்ட வகையில் தஃவா செய்வது என்று சொல்லுவதும் இதுவே. இஸ்லாம் தேசப்பற்றினை ஈமானின் பகுதியாக ஆக்கியிருப்பதன் எதிர்பார்ப்பும் அதுவே.
ஒரு தேசப்பற்று மிக்க அரசியல் வாதியால் நாட்டுக்கு வளமிக்க திட்டங்களை அமுல்படுத்துவது எவ்வளது இலகு. ஒரு திட்ட அமுலாக்கத்தில் தனிப்பட்ட இலாபங்களை அவன் கருத்தில்கொள்வதை விட தேச நலன் என்ற உணர்வு அவனை மிகைத்திருக்கும். இலஞ்சம் என்ற வார்த்தைக்கு அங்கு கண்டிப்பாக இடமிருக்காது. தேசநலன் சார் நடவடிக்கைகள் அனைத்திலும் அதனை யார் முன்னெடுத்தாலும் அவனிடம் காணப்படும் தேச உணர்வு தானாகவே அவனை முன்தள்ளி அந்த நடவடிக்கைகளில் அவனையும் ஒரு பங்காளியாக்கும்.. நான் செய்தேன் என்ற சுய பெருமையை அவனிடம் நீக்கி நான் இந்த தாய் நாட்டுக்கு செய்ய வேண்டிய இன்னும் எத்தனையோ கடமைகள் பாக்கியிருப்பதாக அவனுக்கு உணர்த்தும்.
வீதி அபிவிருத்தியில் ஒரு அரசியல் வாதிக்கும் அடுத்ததாக எத்தனையோ குட்டிக் குட்டிக் அரசியல் வாதிகள் இலாபாம் அடைந்து கொண்டு செல்கிறார்கள். அவர்கள் அனைவரும் தேச உணர்வு மிக்கவர்களாக இருந்தால் தனிப்பட்ட இலாபங்களுக்கு அப்பால் அவர்களின் மூலம் அமுல்படுத்தப்படும் வீதித்திட்டங்களின் ஆயுள் காலம், தரம் என்பன மிகைப்படுத்தப்படும். ஒரு சிறு மழைக்குக் கரைந்தோடும் அளவுக்கு திட்டத்தை சுய இலாபத்துடன் நிறைவேற்றுவதனை தவிர்க்கமுடியும். இதனால் தேசத்தின் பொருளாதாரம் விரயமாக்குவது தடுக்கப்படும். நாட்டின் பொருளாதாரம் விரயமாக்கப்படுவது தவிர்க்கப்டும் போது வாழ்க்கைச் செலவு குறைக்கப்படும் குறைந்த செலவில் தேவைகள் நிறைவேற்றப்படவும் குற்றச் செயல்கள் தடுக்கப்படவும் காரணமாக அமையும்.
இப்படியாக ஒவ்வொரு துறை சார்ந்தும் தொழிற்படும் ஒவ்வொரு பிரஜையும் இந்த தேச நலனை கருத்திற் கொள்ளும் போது நாட்டின் அபிவிருத்திக்கான ஒவ்வொரு பிரஜையினதும் பங்களிப்பு இயல்பாகவே வழங்கப்படுகிறது.
ஈமானின் ஒரு அம்சமான தேசப்பற்றினை குழந்தைப்பராயத்திலிருந்தே கல்வியியல் செயற்பாடுகளுடன் இணைத்து வழங்குவது அவர்கள் நல்ல பிரஜைகளாக உருவாவாதற்கு உதவும். அது ஈமானின் ஒரு அம்சமாக காணப்படுவதால் இதனை பாலர் பாடசாலைகள், குழந்தைகளுக்கான அல் குர்அன் பாடசாலைகள் என்பவற்றிலும் அவற்றினை போதிப்பதும் கண்டிப்பான ஒன்றாக மாறுகிறது. ஈமானின் அம்சங்கள் என எவற்றையெல்லாம் நாம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கின்றோமோ அவற்றுடன் தேசப்பற்றினையும் சேர்த்துச் சொல்லிக் கொடுக்க வேண்டியது இதனால் கடமையாகிறது.
பல நாடுகளின் அனுபவங்கள் எமக்கு இதனை நடைமுறைப்படுத்த துணைபுரியும். அறபு நாடுகளின் ஆரம்ப நிலை பாடப்புத்தங்களில் முதல் பாடமாக தேசப்பற்று அமைந்து காணப்படுகிறது. எமது நாட்டிலும் இதனை நாம் காணமுடியும். ஒரு வித்தியாசம். நாம் நாட்டின் பாடப்புத்தகங்களில் தேசிய கீதத்தினை மட்டும் பிரசுரிக்கப்பட்டிருக்கும். அதனை கற்பிக்கும் ஆசிரியர்களும் அதுபற்றிச் சொல்வதும் இல்லை. நடைமுறையில் பாடப்புத்தகங்களில் காணப்படும் மேலதிக பக்கமாகவே காணப்படுகிறது. அறபு நாடுகளின் அனுபவங்கள் பின்வருமாறு அமைகின்றது. ஆங்குள்ள பாடப்புத்தகங்களின் முதல் பாடமாக தேசப்பற்றுடன் தொடர்பான ஒரு பாடமாக அமையும். அது கண்டிப்பாக தேசிய கீதமாக அமைவதில்லை. ஆரம்பநிலை பாடப்புத்தகங்களில் வயது மட்டத்திற்கு ஏற்ற வகையில் அது ஒரு சிறு கவிதையாக அல்லது பாடலாக அமைந்து காணப்படும். ஒரு குழந்தையின் பாடசாலை வாழ்வின் துவக்க நாளிலேயே தேசம் பற்றிய பாடம் அவர்களுக்கு போதிக்கப்படுகிறது. இது எமக்கு ஒரு நல்ல அனுபவம். மேலை நாடுகளின் போதனா முறைகள் பற்றியும் குழந்தைகளுக்கு தேசப்பற்றினை ஊட்டுதல் என்ற முறைமைகள் பற்றிய தேடுகையின் போதும் மூன்று விதமான அனுபவங்களை அவர்கள் எம்மோடு பகிர்ந்து கொள்கின்றார்கள். ஒன்று: தேசியக் கொடி இரண்டு: தேசிய கீதம். மூன்று: தேசிய தினம் இந்த மூன்று அனுபவங்களையும் பகிந்து கொள்வதற்காக அந்தந்த நாடுகளுக்கான விஷேட தினங்கள் மிக முக்கியமாக நினைவு கூரப்படுகின்றன. நாம் இங்கு ஆரம்ப நிலை கல்வியில் அல்லது பாலர் மற்றும் ஆல் குர்ஆன் பாடசாலைகளில் தேசப்பற்றினை கற்பித்தல் முறைமை பற்றி பேசுகின்றோம். இங்கு வரலாற்றுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை. உதாரணமாக நம் நாட்டைப் பொறுத்த வரையில் யார் இலங்கைக்கு முதல் வந்தார்கள் என்று தொடங்கி வெள்ளையர்கள் எம் நாட்டின் மீதான காலனித்துவத்தினை நீக்கிக் கொண்டது வரையான வரலாறு தொடர்கிறது. தேசப்பற்று என்பது வரலாற்றினையும் மையப்படுத்திக் கொடுக்கப்படத் தேவையில்லை என்பது எமது கருத்து. தாய் நாட்டின் மீதான பற்றும் நேசமும் குழந்தைகளிடம் பெற்றோர் முதற் கொண்டு பாடசாலை வரை குழந்தைகளுக்கு கடத்தப்பட வேண்டும். சில மாதிரி செயற்திட்டங்களுக்கான ஆலோசனைகளை நாம் இங்கு பகிர்ந்து கொண்கின்றோம். தேசியக் கொடி தாய்நாட்டின் கொடி பற்றி அறிமுகம் குழந்தைகளிடத்தில் காணப்படுவது முக்கியமாகும். நாட்டின் சின்னமாக விளங்கும் தேசியக் கொடியின் உருவ மாதிரி முதற்கொண்டு அதன் உட்பொதிவுகள் உணர்த்தும் அம்சங்களை ஓரளலவிலேனும் வழங்க வேண்டும். நம் நாட்டின் இனப்பலவகைத் தன்மையினையும் அதனை நம் தேசியக் கொடி உணர்த்தி நிற்பதனையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். அரசியல், இன பாகுபடுக்கு அப்பால் இந்நாட்டின் பல்வகைத்தன்மையினை ஏற்கும் மனப்பான்மையினை இதன் மூலம் வளர்க்கும் வகையில் கற்பித்தல் அனுகுமுறைகளை அமைத்துக் கொள்ள முடியும். தேசியக் கொடியினை வரைவதற்கு பயிற்றுவிக்க முடியுமாயின் அதுவும் ஆரோக்கியமான ஒன்றாக அமையும். அதற்கான பயிற்சி முறைகளையும் முறைசார்ந்து வளங்க முடியும். ஒரு தேசியக் கொடிக்கிருக்கும் முக்கியத்துவத்தையும் அதற்கு வழங்க வேண்டிய மரியாதை என்ன என்பதற்கு பயிற்று விப்பாளர்கள் முறைசார்ந்து வகுத்துக் கொள்ள வேண்டும். தேசிய கீதம் தேசிய கீதம் என்பது அனைவரும் நினைவில் வைத்திருக்க வேண்டிய ஒன்று என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. நம் நாட்டின் தேசிய கீதத்தின் மொழிபெயர்ப்பினை நாம் கற்பிக்க வேண்டும். குழந்தைகள் என்று வரும் போது அவர்களுக்கு அதனை மனப்பாடும் செய்வதும் எல்லா குழந்தைகளுக்கும் ஒரே நேரத்தில் சாத்தியப்படாது. தேசிய கீதத்தின் ஒரு பகுதியை பயிற்றுவிப்பாளர்கள் தொடர்ந்து சொல்லிக் கொடுப்பதன் மூலம் அதனை சம அளவில் எல்லா குழந்தைகளுக்கும் பயிற்றுவிக்கலாம். குழந்தைகளின் அறிவுத்தரம், வாழும் குடும்ப சூழல், பெற்றோரின் முயற்சி என்பவற்றினடிப்படையில் தேசிய கீதத்தினை முழுமையாக பயிற்றுவிக்கும் முயற்சிக்கு நகர முடியும். அதே வேளை மற்றுமொரு யதார்த்ததையும் நாம் கண்டிப்பாக மறந்துவிடக்கூடாது. அதுதான் தற்காலக் குழந்தைகள் அறிவுத்தரத்திலும், கிரகித்தல் தரத்திலும் நம்மைவிட பல மடங்கு முன் நிற்கிறார்கள் என்பது. அனைத்து பயிற்றுவிப்பாளர்களும் இதனை ஏற்றுக்கொள்வார்கள். அதற்கேற்றவகையில் முறைசார்ந்த மற்றும் முறை சாரா திட்டமிடல் மூலமூம் பயிற்று முறைகளை வகுத்துக் கொள்ள முடியும். தேசிய தினம். நாம் மேற்கூறிய இரண்டு அம்சங்களினது பயிற்றுவிப்பின் அறுவடை தினமாக பயிற்றுவிப்பாளர்கள் இதனை கருதவேண்டும். குறித்த தினத்தில் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து குறித்த தினத்தை அனுஷ்டிக்கின்றன என்பதனை காண்பிக்க முடியும். தேசிய தின நிகழ்வுகளை பாடசாலை அல்லது ஆல் குர்ஆன் பாடசாலைகளில் ஒழுங்கு செய்ய முடியும். பேற்றோரையும் வரவழைத்து இந்நிகழ்வினை செய்யும் போது குறைந்திருக்கும் தேசப்பற்றுணர்வினை தட்டியெழுப்பவும் அது துணைபுரியும். குழந்தைகளுக்கு தேசப்பற்றினை ஊட்டி வளர்த்தல் அல்லது பயிற்றுவித்தல் என்ற விடயத்திற்கான எமது சில அனுகுமுறைகளையே நாம் இங்கு பேசியிருக்கின்றோம். தேச உணர்வினை ஈமானில் ஒரு பகுதியாக இஸ்லாம் எமக்கு சொல்லித்தருவதே எமது இந்த முயற்சிக்கு காரணம்.